கோலாலம்பூர், அக். 19 - சிலாங்கூரில் நேற்றிரவு 117 ஆக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 136 ஆக உயர்ந்துள்ளது.
சிலாங்கூர் உட்பட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஐந்து மாநிலங்களில் திறக்கப்பட்டுள்ள 27 நிவாரண மையங்களில் 3,781 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.
பேராக்கில், கிரியான், ஹிலிர் பேராக், கம்பார், பேராக் தெங்கா மற்றும் கோல கங்சார் ஆகிய இடங்களில் 1,619 பேர் 12 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 1,459 பேராக இருந்தது என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெர்லில், நேற்றிரவு 47 பேராக இருந்த வெள்ள அகதிகள் எண்ணிக்கை இன்று காலை 469 பேராக உயர்ந்துள்ளது. அதே சமயம் கெடாவிலும் இதேபோன்ற சூழ்நிலை நிலவுகிறது. மூன்று நிவாரண மையங்களில் 298 பேர் தங்கியுள்ளனர்.
பகாங் மாநிலத்தில் வெள்ள நிலைமை மேம்பட்டுள்ளது. நேற்றிரவு 1,418 பேராக இருந்த பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 1,259 பேராக குறைந்தது.








