கோலாலம்பூர், அக். 18- நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும்
பெரிய அடிப்படை வசதித் திட்டங்களை பூர்த்தி செய்வதில் அரசாங்கம்
முன்னுரிமை அளிக்கும்.
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் போக்குவரத்தைக் குறைப்பதற்கு
ஏதுவாக மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையின் பந்திங் முதல் கேலாங்
பாத்தா வரையிலான பகுதியின் நிர்மாணிப்பும் அதில் அடங்கும்.
நிதிச் செலவினத்தைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் கவனம்
செலுத்தும் காரணத்தால் மெகா அடிப்படை வசதித் திட்டங்களை
தொடங்குவதற்கான நோக்கத்தை அது கொண்டிருக்கவில்லை என்று
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
அடிப்படை வசதித திட்டங்களின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய
பயனீட்டாளர்கள் கட்டணம் செலுத்தும் கோட்பாட்டை அமல்படுத்துவது
குறித்து அரசாங்கம் ஆலோசிக்கும் என்று நிதியமைச்சருமான அவர்
சொன்னார்.
சிலாங்கூர் மாநிலத்தில் நாம் அமல்படுத்தவுள்ள திட்டங்களில் சுங்கை
லங்காட் 2 வெள்ளத் தடுப்புத் திட்டம் மற்றும் கிள்ளான் துறைமுக
விரிவாக்கத் திட்டம் ஆகியவையும் அடங்கும். இந்த தேசிய துறைமுகம்
உலகின் தலைசிறந்த பத்து துறைமுகங்களில் ஒன்றாக விளங்குவதை
உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார்
அவர்.
இது தவிர பூலாவ் இண்டா மற்றும் வட துறைமுகத்திற்கு இடையிலான
சாலை விரிவாக்கப்பணியும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.


