NATIONAL

1.8 கோடி வெள்ளியை உட்படுத்திய “காக்காவ்“ கிரிப்டா முதலீட்டு மோசடி- அறுவர் கைது

18 அக்டோபர் 2024, 7:28 AM
1.8 கோடி வெள்ளியை உட்படுத்திய “காக்காவ்“ கிரிப்டா முதலீட்டு மோசடி- அறுவர் கைது

கோலாலம்பூர், அக் 18 - ஒரு கோடியே 80 லட்சம் வெள்ளியை உட்படுத்திய

காக்காவ் கிரிப்டோ முதலீட்டு மோசடியில் தொடர்புள்ளவர்கள் என

சந்தேகிக்கப்படும் ஆறு உள்நாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சரவாக், சபா, பினாங்கு, கெடா, மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய

மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனை

நடவடிக்கைகளில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இம்மாதம் 7 முதல் 11ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட அந்த

சோதனை நடவடிக்கைகளில் 19 முதல் 41 வயது வரையிலான இரு

பெண்கள் உள்ளிட்ட அறுவர் கைது செய்யப்பட்டனர் என்று புக்கிட் அமான்

வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது

யூசுப் கூறினார்.

இந்த திட்டத்தில் பங்கு கொள்ளும் முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப்

பெறுவதற்கு ஏதுவாக பெயரளவில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களின்

உரிமையாளர்களாக அந்த அறுவரும் செயல்பட்டு வந்துள்ளனர் என்று

அவர் சொன்னார்.

இந்த முதலீடு தொடர்பில் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தும்

அக்கும்பல் காக்காவ் நிறுவனத்தின் பெயரை அதில் பயன்படுத்தி

கிரிப்டோ முதலீட்டின் பங்குத் தரகர்களாக அந்நிறுவனம் விளங்குகிறது

எனக் கூறி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று அவர்

தெரிவித்தார்.

ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் வாட்ஸ்ஆப் குழுவில் சேர்க்கப்பட்டு இந்த

முதலீடு தொடர்பில் விளக்கம் அளிக்கப்படும். பின்னர் காக்காவ் முதலீட்டு

செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உறுப்பினர்களாக ஆகும்படி

அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுவர் என்று அவர் இன்று நடைபெற்ற

செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இத்திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள லாபத்

தொகையை சம்பந்தப்பட்ட அந்த செயலியின் வாயிலாக அறிந்து கொள்ள

இயலும். எனினும், லாபத் தொகையை லாபத் தொகையை மீட்க முயலும்

போது பல்வேறு காரணங்களைக் கூறி அந்த கோரிக்கையை அக்கும்பல்

நிராகரித்து விடும் என அவர் சொன்னார்.

இந்த மோசடி தொடர்பில் நாடு முழுவதும் 50 புகார்களைத் தாங்கள்

பெற்றுள்ளதாகக் கூறிய அவர், இந்த மோசடி தொடர்பில் குற்றவியல்

சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.