ஈப்போ, அக் 18: கட்டுப்பாட்டு விலைக்கு மேல் சமையல் எண்ணெயை விற்ற குற்றச்சாட்டில், தெலோக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட மளிகைகடை வியாபாரி ஒருவருக்கு RM10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ரசினா முகமட் அஜ்முல் கான் (34)அபராதத்தை செலுத்தத் தவறினால், நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று பேராக் மாநில உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

விலைக் கட்டுப்பாடு மற்றும் லாப எதிர்ப்பு (அதிகபட்ச விலை நிர்ணயம்) ஆணை 2023ஐ மீறியதற்காக அந்தப் பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.இரண்டு கிலோகிராம் கொள்ளளவு கொண்ட பாட்டிலில் சுத்தமான சமையல் எண்ணெயை அதிகபட்ச சில்லறை விலையான RM13.30 பதிலாக RM13.50 விலையில் விற்கப்பட்டது.

"குற்றம் சாட்டப்பட்டவர் மார்ச் 27 அன்று மதியம் 2.30 மணியளவில் தெலோக் இந்தானில் உள்ள கொம்பெலெக்ஸ் மெனாரா சொண்டோங்கில் இக்குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகாத நிலையில், அரசுத் துணை வழக்கறிஞர் ஹஸ்யுதன்டீ கலீல் வழக்குத் தொடர்ந்தார்.

– பெர்னாமா