கோலாலம்பூர், அக்.18: நேற்று மதியம் காஜாங்கில் உள்ள சௌஜானா இம்பியான் என்ற இடத்தில் 17 வயது சிறுமி ஒருவர் இரண்டு மாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தார்.
பாதிக்கப்பட்டவர் மேல் மாடி அறையில் கண்டுபிடிக்கப் பட்டதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல் பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் சிலாங்கூர் அகமட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
"இச்சம்பவத்தின் போது,பாதிக்கப்பட்டவரின் தாயும் தந்தையும் வேலையில் இருந்தனர் மற்றும் அவரது இளைய சகோதரர் பள்ளியில் இருந்ததாக தெரிய வந்தது. எனவே, பாதிக்கப்பட்டவர் வீட்டில் தனியாக இருந்ததாக நம்பப்படுகிறது மற்றும் தீ விபத்தால் 80 சதவீதம் சேதம் ஏற்பட்டுள்ளது,"என அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
மாலை 4.20 மணிக்கு சம்பவம் தொடர்பாக தனது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாகவும் காஜாங், பாங்கி மற்றும் ஶ்ரீ கெம்பாங்கான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.
"தீ முற்றிலும் வெற்றிகரமாக அணைக்கப்பட்டது. கண்காணிப்பு நாய் பிரிவு (K9) மற்றும் மாநில தடயவியல் ஆகியவையும் சம்பவ இடத்தில் இருந்தன," என்று அவர் கூறினார்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது.
– பெர்னாமா


