ஷா ஆலம், அக் 17: இன்று தொடங்கிய கடல் பெருக்கு நிகழ்வைத் தொடர்ந்து சிலாங்கூர் முழுவதும் மொத்தம் 396 பகுதிகள் வெள்ளத்தை எதிர்கொள்ளும் சாத்தியக்கூறுகள் கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளன.
அதிக மக்கள் தொகை கொண்ட நான்கு முக்கிய இடங்களில் தனது தரப்பு கவனம் செலுத்துவதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குனரான அஹ்மட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
"சிலாங்கூர் முழுவதும் 396 பகுதிகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம், இப்பகுதிகளில் கடல் பெருக்கு குறிப்பாக நீடித்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.
"தீயணைப்பு வீரர்கள் சுங்கை கிள்ளான், சுங்கை லங்காட், சுங்கை ரசாவ் மற்றும் சுங்கை பெர்ணம் நதிகளின் நிலைமை மோசமடைவதைத் தடுக்க கவனம் செலுத்துகின்றனர்" என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
தீயணைப்புத் துறையானது மாநிலம் முழுவதும் 79 படகுகளை வழங்குவது உட்பட அனைத்து இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை சோதிக்கும் விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளது.
மேலும், தேவையற்ற சம்பவங்களை தவிர்க்கும் வகையில், இனிவரும் காலங்களில் கடற்கரை மற்றும் மலைப்பகுதிகள் அருகில் பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
இன்று தொடங்கி அக்டோபர் 20 ஆம் தேதி வரை கடல் பெருக்கு ஏற்படும் நிகழ்வைத் தொடர்ந்து சிலாங்கூரில் உள்ள கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு மாநில அரசு கேட்டுக் கொண்டது.








