புத்ராஜெயா, அக். 17 - வெளிநாட்டு மீன்பிடி படகுகளின் ஊடுருவலைத் தடுத்து நாட்டின் கடல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பல அமலாக்கத் துறைகளை உள்ளடக்கிய ஒப் நாகா நடவடிக்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு மே முதல் இவ்வாண்டு செப்டம்பர் வரை மொத்தம் 598 வெளிநாட்டு மீன்பிடிக் படகுகள் தடுத்து வைக்கப்பட்டன.
இந்த காலகட்டத்தில் பிடிபட்ட பொருள்களின் மொத்த மதிப்பு 20.9 கோடி வெள்ளிக்கும் அதிகமாகும் என்று மலேசிய கடல் சார் அமலாக்க நிறுவனத்தின் தலைமை இயக்குநர் அட்மிரல் டத்தோ முகமது ரோஸ்லி அப்துல்லா கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் 75 விழுக்காட்டினர் அதாவது 4,391 பேர் வியட்நாமிய மீனவர்களாவர். அவர்களிடமிருந்து 451 மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன என்றார் அவர்.
சட்டவிரோத, புகாரளிக்கப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடி பிரச்சினைகளுக்கு பாதுகாப்புப் படைகள் மற்றும் உள்ளூர் கடல் சமூகம் உட்பட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் தீர்வு காணப்பட வேண்டும்.
இதனைக் கட்டுப்படுத்தாவிட்டால் கடல் சூழியல் அமைப்பைச் சீர்குலைத்து மீன் குஞ்சுகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். இறுதியில் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஒப் நாகாவின் வெற்றியை உறுதி செய்வதற்கான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முடியும் என நம்பிக்கைத் தெரிவித்த அவர், இதன் மூலம் தேசிய இறையாண்மையைப் பேணவும் நாட்டின் பொருளாதார வளங்களைப் பாதுகாக்கவும் இயலும் என்று தெரிவித்தார்.
ஓப் நாகா என்பது அரச மலேசிய கடற்படை, அரச மலேசிய ஆகாயப்படை, அரச மலேசிய போலீஸ் படை, அரச மலேசிய சுங்கத் துறை மற்றும் மீன்வளத் துறை ஆகியவற்றின் ஒத்துழைப்பை உள்ளடக்கி கடவ்சார் அமலாக்க நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்.


