காஜாங், அக். 17- இங்குள்ள காஜாங் பெர்டானாவில் உள்ள துரித உணவு உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் சோதனை நடத்திய போலீசார் ரன்னர் எனப்படும் இடைத் தரகர் ஒருவரைக் கைது செய்து 1 கோடி வெள்ளி மதிப்புள்ள 315 கிலோகிராம் ஷாபு போதைப் பொருளைப் பறிமுதல் செய்தனர்.
இருபத்தைந்து வயதுடைய நபர் ஓட்டிச் சென்ற ஹோண்டா சிஆர்வி ரக வாகனத்தில் அந்த போதைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ காவ் கோக் சின் கூறினார்.
கடந்த சனிக்கிழமை இரவு 8.38 மணியளவில் போலீசார் நடத்திய சோதனையில் 20 அரிசி மூட்டைகளில் குவான்யிங்வாங் மூலிகை டீ என எழுதப்பட்டிருந்த போதைப் பொருள் என சந்தேகிக்கப்படும் 15 மஞ்சள் பிளாஸ்டிக் பொட்டலங்களை போலீசார் கண்டுபிடித்தனர். அவை காரின் பின் இருக்கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்று அவர் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட ஷாபு போதைப் பொருள் 315 கிலோகிராம் எடையுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 15.8 லட்சம் போதைப் பித்தர்கள்
இதைப் பயன்படுத்தலாம் என்று சொன்னார்.
காஜாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு இன்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கானுடன் வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து செயல்பட்டு வரும் இப்போதைப்பொருள் கடத்தல் கும்பல், கிழக்குக் கரை மாநிலங்கள் வழியாக அண்டை நாடுகளில் இருந்து போதைப் பொருளைப் பெற்றதாகவும், சம்பந்தப்பட்ட 'ரன்னர்' ஒவ்வொரு விநியோகத்திற்கும் 10,000 வெள்ளி ஊதியம் பெற்றதாகவும் அவர் சொன்னார்.


