ஷா ஆலம்,அக் 17: நேற்று காலை 9.30 மணி அளவில் ஜுக்ரா தமிழ்ப்பள்ளி
மாணவர்களுக்கு பள்ளி பேருந்து கட்டண உதவிக்கான சிலாங்கூர் மாநில அரசின்
உதவி மானியம் மோரிப் தொகுதியின் இந்திய சமூகத் தலைவரால் அப்பள்ளியில்
வழங்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஆண்டுதோறும்
வழங்கப்படும் இந்த மானிய உதவி திட்டத்தில், ஒவ்வொரு மாணவருக்கும் தலா 300
வெள்ளி வழங்கப்படுகிறது. இவ்வாண்டு இப்பள்ளியில் உள்ள சுமார் 15 வறிய
நிலையில் உள்ள மாணவர்கள் இந்த உதவியை பெற்றனர்.
இந்நிகழ்வில் மோரிப் தொகுதியின் இந்திய சமூகத் தலைவர் திரு சாம்சோன்,
ஜுக்ரா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
வசதி குறைந்த மாணவர்கள் கல்வியை தொடர்வதில் பொருளாதாரச் சிக்கல் தடையாக
இருக்க கூடாது என்பதற்காக மாநில அரசு இந்த பேருந்து கட்டணத் திட்டத்தை
அமுல்படுத்தி வருவதாக திரு சாம்சோன் தெரிவித்தார். எனவே, இந்த உதவியை
நல்முறையில் பயன்படுத்துமாறு அவர் அனைவரையும் கேட்டு கொண்டார். மேலும்,
ஏழைகளின் நலனில் அக்கறை காட்டும் மாநில அரசின் பரிவுக்கு தனது மனமார்ந்த
நன்றியையும், அவர் தெரிவித்துக் கொண்டார்.
தமிழ்ப்பள்ளிகளை பிரதான இலக்காகக் கொண்ட இந்த பேருந்துக் கட்டண உதவித்
திட்டத்தை மாநில அரசு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் அமல் படுத்தி வருவது
குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு இந்த உதவி திட்டத்தின் வழி மாநிலத்தில் உள்ள 99 தமிழ்ப்
பள்ளிகளில் பயிலும் 3426 வசதி குறைந்த மாணவர்களுக்கு 10 லட்சத்து 27
ஆயிரத்து 800 வெள்ளி பகிர்ந்தளிக்க படுவதாக மனித வளம் மற்றும் வறுமை
ஒழிப்பு துறையின் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பா
ராய்டு கடந்த 7ம் தேதி ஷா ஆலம் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியின்
மாநாட்டு மையத்தில் அறிவித்திருந்தார்.


