வாஷிங்டன், அக். 17- லெபானில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில்
மறைந்திருந்தாலும் ஈரான் ஆதரவிலான ஹெஸ்புல்லா தீவிரவாதிகளைத்
தேடி அழிக்கும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது. அதேவேளையில் பொது
மக்களைப் பாதுகாக்கும் வகையில் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட
வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
நேற்று இங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் லெபனான் குறித்து
எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமெரிக்க வெளியுறவு
அமைச்சின் பேச்சாளரான மேத்தியூ மில்லர் இவ்வாறு கூறினார்.
லெபானின் தென் பகுதி நகரான நபேத்தியாவில் உள்ள நகராட்சி மன்ற
தலைமையகம் மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் மேயர்
உள்பட 16 பேர் பலியானது குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பிய போது,
குறிப்பிட்ட ஒரு தாக்குதல் குறித்து தம்மால் கருத்துரைக்க முடியாது
என்றும் இருப்பினும், சிவிலியன்களுக்குச் சொந்தமான கட்டிடங்கள்
அழிக்கப்படுவதைக் காண தாங்கள் விரும்பவில்லை என்றும் அவர்
பதிலளித்தார்.
ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் சிவிலியன்களின் வீடுகளில் மற்றும்
வீடுகளுக்கு அடியில் உள்ள பதுங்கு குழிகளிலிருந்து செயல்படுவதாக
நாங்கள் அறிகிறோம். ராக்கெட்டுகள் மற்றும் இதர இராணுவ ஆயுதங்கள்
பொது மக்களின் வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை காட்டும்
காணொளிகளை கடந்த இரு வாரங்களாக நாம் பார்த்து வருகிறோம் என்று
அவர் சொன்னார்.
இத்தகைய சட்டப்பூர்வ இலக்குகளை குறி வைக்கும் உரிமை இஸ்ரேலுக்கு
உள்ளது. அதே சமயம், பொது மக்கள் மற்றும் சிவிலியன்களின்
கட்டமைப்புகளை பாதுகாக்கும் வகையில் அந்த நடவடிக்கைகளை அந்நாடு
மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.


