கோலாலம்பூர், அக். 17- ஜெர்மனியுடனான தற்காப்பு உறவுகள்
எதிர்காலத்திலும் தொடர்ந்து வலுப்பெறும் என மலேசிய நம்புவதாக
தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் கூறினார்.
மலேசியாவும் ஜெர்மனியும் நீண்ட காலமாக வலுவான தற்காப்பு
ஒத்துழைப்பைக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
கோலக் கிள்ளான் க்ரூஸ் முனையத்தில் நங்கூரமிட்டுள்ள ஜெர்மனியின்
போர்க் கப்பலான எப்.ஜி.எஸ். பேடன்-வாட்டர்பெர்க் மற்றும் துணைக்
கப்பலான எப்.ஜி.எஸ். ஃபிராங்பெர்ட் கப்பலை பார்வையிட்ட போது அவர்
இதனைத் தெரிவித்தார்.
தற்காப்பு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ லோக்மான் ஹக்கிம்
அலி மற்றும் கடற்படைத் தளபதி டத்தே ஜூல்ஹெல்மி இத்னாய்ன்
அமைச்சரின் இப்பயணத்தில் உடனிருந்தனர்.
தனது பயணத்தின் ஒரு பகுதியாக மலேசிய துறைமுகத்தைத்
தேர்ந்தெடுத்தமைக்காக ஜெர்மனிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக்
கூறிய காலிட் நோர்டின், இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு
இந்த வருகையை மலேசிய கடற்படையும் ஜெர்மனி கடற்படையும்
பயன்படுத்திக் கொள்ள இயலும் என்றார்.
இரு நாடுகளின் தற்காப்பு உறவு கடற்படையுடன் மட்டும் நின்றுவிடாது
என நாங்கள் கருதுகிறோம். ஜெர்மனி ஆகாயப் படையின் 2024 ஆசிய
பசிபிக் பயணத்தில் இடை நிறுத்தப் பகுதியாக மலேசியாவையும்
தேர்ந்தெடுத்ததற்காக ஜெர்மனிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்
என்றார் அவர்.
அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் லங்காவி அனைத்துலக கடல் மற்றும்
ஆகாயக் கண்காட்சி, “எனேபள் அண்ட் என்ஹான்ஸ்“ முன்னெடுப்பு
ஆகியவற்றில் ஜெர்மனி பங்கெடுப்பதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான தற்காப்பு உறவை மேலும் வலுப்படுத்த இயலும் என்றார் அவர்.


