சிப்பாங், அக். 17- சுமார் 66 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 207 கிலோ
மெத்தம்ஃபெத்தமினா வகை போதைப் பொருளை தொழில்துறை
இயந்திரத்தில் மறைத்து கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி
வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
மலேசிய சுங்கத் துறையின் மத்திய பிராந்தியத்தின் மூன்றாவது பிரிவு
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அண்மையில்
மேற்கொண்ட சோதனையில் இந்த கடத்தல் முயற்சி அம்பலத்திற்கு
வந்தது.
இம்மாதம் 6ஆம் தேதி விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில்
இருந்த தொழில்துறை இயந்திரம் ஒன்றைச் சோதனையிட்ட அதிகாரிகள்
அதனுள் அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக இடத்தில் போதைப் பொருள்
மறைத்து வைக்கப்பட்டுள்ளதைக் கண்டதாக மலேசிய சுங்கத் துறையின்
தலைமை இயக்குநர் டத்தோ அனிஸ் ரிசானா முகமது ஜைனுடின்
கூறினார்.
அமெரிக்க கண்டத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக நம்ப்படும் இந்த
போதைப் பொருள் வளைகுடா நாட்டிற்கு கொண்டுச் செல்லப்படவிருந்தது.
சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும் மலேசிய சுங்கத் துறைக்கும்
இடையிலான அணுக்கமான ஒத்துழைப்பின் வாயிலாக இந்த வெற்றி
கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
தொழில்துறை அளவு கருவி என சுங்கத் துறையிடம்
பிரகனடப்படுத்தப்படும் இந்த இயந்திரத்தில் பிரத்தியேகமாக
உருவாக்கப்பட்ட இடத்தில் போதைப் பொருளை மறைத்துக் கடத்துவது
கடத்தல் கும்பலின் பாணியாகும் என அவர் நேற்று இங்கு நடைபெற்ற
செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இது தவிர, இம்மாதம் 10ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட மற்றொரு
சோதனையில் 102,300 வெள்ளி மதிப்புள்ள 3 கிலோ கஞ்சா பறிமுதல்
செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது
முனையத்தில் அண்டை நாட்டிற்குச் சென்று திரும்பிய இரு
உள்நாட்டினரிடம் நடத்தப்பட்ட சோதனையில் அந்த பொருள் கண்டு
பிடிக்கப்பட்டது என்றார் அவர்.


