சுக்காய், அக். 17- மீன் பிடிப்பதற்காக கெமமான் கடல் பகுதிக்கு கடந்த
ஞாயிற்றுக்கிழமைச் சென்ற மூன்று மீனவர்கள் இரு தினங்களாகியும்
இன்னும் வீடு திரும்பவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் தாங்கள்
புகாரைப் பெற்றதாக கடல்சார் அமலாக்க முகமையின் கெமமான்
பிராந்திய இயக்குநர் அரிபின் கசாலி கூறினார்.
இதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 2.50 மணியளவில் குவாந்தான்
கடலசார் மீட்பு துணை நிலையத்தின் வாயிலாக தேடுதல் மற்றும் மீட்பு
நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது என அவர் சொன்னார்.
கடந்த அக்டோபர் 13ஆம் தேதி கடலுக்குச் சென்ற ஏ பிரிவைச் சேர்ந்த
உள்நாட்டு மீன்பிடி படகொன்று இதுவரை கரைக்குத் திரும்பாதது
தொடர்பில் நேற்று 2.15 மணியளவில் புகார் அளிக்கப்பட்டது என்று அவர்
குறிப்பிட்டார்.
வழக்கமாக மீனவர்கள் கடலில் இரு தினங்களுக்கு மட்டுமே தங்கி மீன்
பிடிப்பர். ஆயினும் அந்த மூன்று மீனவர்களும் இன்னும் கரைக்கு
திரும்பாததோடு அவர்களை தொடர்பு கொள்ளவும் இயலவில்லை என
அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
காணாமல் போன படகின் இருப்பிடத்தைக் கண்டறிவதற்காக கெமமான்
கடலின் 30 கடல் மைல் பகுதியில் தேடுதல் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
அந்த படகு இறுதியாக இருந்த இடத்தைக் கண்டறிய முடியாததால்
தேடுதல் பணி விரிவான அளவில் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர்
குறிப்பிட்டார்.


