கோல சிலாங்கூர், அக். 17 - வாழ்க்கையில் சிரமங்கள் அல்லது உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் முன்னாள் ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 158 ஊடகவியலாளர்கள் தாபோங் காசே@ஹவானா (Tabung Kasih@Hawana) முன்னெடுப்பின் மூலம் உதவி பெற்றுள்ளனர் என்று துணைத் தகவல் தொடர்பு அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
அரசாங்கத்தால் வழங்கப்படும் 10 லட்சம் வெள்ளி நிதியின் மூலம் இந்த ஆண்டு 200 ஊடகவியலாளர்களுக்கு உதவும் அமைச்சின் இலக்கு ஏறக்குறைய அடையப்பட்டு விட்டது என்று அவர் சொன்னார்.
நமது சக ஊடகவியலாளர்கள் இன்னும் பணிபுரிந்தாலும் அல்லது ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு உதவுவது இந்த தாபோங் காசே@ஹவானா திட்டத்தின் குறிக்கோளாகும். இத்திட்டத்தின் வழி இதுவரை 158 பேருக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது.
200 பேருக்கு உதவும் இலக்கை அடைய இன்னும் 42 ஊடகவியலாளர்களை அடையாளம் காண்பதற்கான முயற்சிகளை நாங்கள் தொடருவோம் என்று அவர் கூறினார்.
தீபாவளியை முன்னிட்டு மலேசிய நண்பன் நாளேட்டின் முன்னாள் மொழிபெயர்ப்பாளர் கே. லோகநாதனை பெஸ்தாரி ஜெயாவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து தாபோங் காசே @ ஹவானா நிதியை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தியோ இவ்வாறு கூறினார்.
மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் முதன்மை ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜூவும் உடனிருந்தார் .
உதவி தேவைப்படும் ஊடகவியலாளர்கள் அல்லது முன்னாள் ஊழியர்களைப் பற்றி அறிந்த ஊடகச் சங்கங்கள் அல்லது தனிநபர்கள் தாபோங் காசே@ஹவானாவின் செயலகமான பெர்னாமாவைத் தொடர்பு கொள்ளுமாறு தியோ கேட்டுக் கொண்டார்.


