NATIONAL

சிறு தோட்டக்காரர்களுக்கான செம்பனை மறுநடவு மானியத்தை உயர்த்த அமைச்சு திட்டம்

16 அக்டோபர் 2024, 8:55 AM
சிறு தோட்டக்காரர்களுக்கான செம்பனை மறுநடவு மானியத்தை உயர்த்த அமைச்சு திட்டம்

கோலாலம்பூர், அக்.16 - சிறு தோட்டக்காரர்களின்  உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு ஏதுவாக செம்பனை மறு நடவுக்கு வழங்கப்படும் மானிய  உதவிகளை அதிகரிப்பது குறித்து  நிதி அமைச்சுடன் தோட்டத் தொழில்  மற்றும் மூலப்பொருள் அமைச்சு விவாதிக்கும்.

சிறு தோட்டக்காரர்கள் மத்தியில்  செம்பனை மறு நடவு விகிதம் 0.2 விழுக்காடாக  மட்டுமே உள்ளதாக  தோட்டத் தொழில்  மற்றும் மூலப்பொருள் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி கூறினார்.

இது  வருடாந்திர விகிதமான  4 விழுக்காட்டை விட மிகவும் குறைவாக உள்ளது என்று மக்களவையில் இன்று  கேள்வி நேரத்தின்போது அவர் தெரிவித்தார்.

​​சிறு விவசாயிகள்  முறையான மறு நடவு திட்டங்களை செயல்படுத்துவதில்லை என்று அவர் சொன்னார்.

சிறு தோட்டக்காரர்களின் மறுநடவுத் திட்டத்திற்கு அரசாங்க மானியமாக  50 விழுக்காட்டுத் தொகையும்   அக்ரோ பேங்க் கடன் மூலமாக எஞ்சிய 50 விழுக்காட்டுத் தொகையும் வழங்க அரசாங்கம் 10 கோடி வெள்ளியை   ஒதுக்கியுள்ளது என்றார் அவர்.

இந்தச் சூழலில், சிறு தோட்டக்காரர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஏதுவாக மானிய உதவியை அதிகரிக்கவும் விண்ணப்ப  செயல்முறையை எளிமைப்படுத்தவும் நிதியமைச்சுடன் விவாதிப்பேன் என அவர் குறிப்பிட்டார்.

முன்பு நாம்  2 கோடி டன்னுக்கும் மேல் செம்பனை எண்ணெய் உற்பத்தி செய்தோம். ஆனால் இப்போது நமது உற்பத்தி 1 கோடியே 86   லட்சம் டன்னாக குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.

வரும் 2025 ஆம் ஆண்டில் சிறு விவசாயிகளுக்கான  செம்பனை மறு நடவுத் திட்டத்திற்கு அரசாங்கம் நிதியுதவியை அதிகரிக்குமா என தம்பின் தொகுதி பெரிக்கத்தான் உறுப்பினர் டத்தோ முகமது இசாம் முகமது  இசா எழுப்பிய துணைக் கேள்விக்கு அவர் இவ்வாறு  பதிலளித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.