அம்பாங் ஜெயா, அக். 16 - வெள்ள அபாயம் உள்ள இடங்கள் மற்றும் கடல்
பெருக்கு சாத்தியத்தைக் அணுக்கமாக கண்காணிப்பதற்கு ஏதுவாக 24 மணி
நேர கண்காணிப்பை மாநில அரசு தொடக்கியுள்ளது.
பேரிடர் ஏற்படும் பட்சத்தில் ஸ்மார்ட் சிலாங்கூர் நடவடிக்கை மையம்
விரைந்து செயல்படுவதற்கு ஏதுவாக இந்த 24 மணி நேர கண்காணிப்பு
நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி கூறினார்.
நாளை தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என
எதிர்பார்க்கப்படும் கடல் பெருக்கை கருத்தில் கொண்டு ஆபத்தான
இடங்களில் தற்காலிக தடுப்பணைகளை நிர்மாணிக்கும் பணி
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநில பொருளாதார நடவடிக்கை மன்றம் கடந்த மாதம்
எடுத்த முடிவின் அடிப்படையில் சில இடங்களில் தற்காலிக
தடுப்பணைகளை நிர்மாணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது
என்று அவர் தெரிவித்தார்.
பேரிடர் தயார் நிலை எவ்வாறு உள்ளது என்பதை இன்று பிற்பகல் நான்
ஆராயவிருக்கிறேன். தடுப்பணைகள் முழுமை பெறாத பட்சத்தில்
அவற்றை விரைந்து முடிக்கும்படி நாங்கள் உத்தரவிடுவோம் என்றார்
அவர்.
இன்று இங்குள்ள தாமான் மெலாவத்தி ஜாலான் இ6 சாலையில்
நிலச்சரிவு பகுதியைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைக் கூறினார்.
உலு லங்காட் வெள்ளம் குறித்து கருத்துரைத்த அவர், வெள்ளத்தில்
பாதிக்கப்பட்டவர்களில் பலர் வீடு திரும்பி விட்டனர் என்றார்.
நேற்று பல இடங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மூன்று அல்லது நான்கு
மணி நேரத்திற்கு மட்டுமே நீடித்தது. எந்த இடத்திலும் நீர்
தேங்கியிருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூரில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளம் சிலாங்கூரின் பல
பகுதிகள் நீரில் மூழ்கக் காரணமாக இருந்தது.


