செர்டாங், அக். 16 - எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் ஆசியான் அமைப்பின்
தலைவர் பொறுப்பை மலேசியா ஏற்பதற்கான தயார் நிலை குறித்து
விவாதிப்பதற்காக இன்று நடைபெறும் சிறப்பு அமைச்சரவைக்
கூட்டத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
தலைமையேற்கவுள்ளார்.
அமைச்சுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதை உறுதி
செய்யும் நோக்கில் இந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படுவதாக
உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ
அர்மிஸாம் முகமது அலி கூறினார்.
பிரதமர் இன்று சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவிருக்கிறார்.
வழக்கமாக புதன் கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம்
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் காரணமாக தற்போது வெள்ளிக்கிழமைக்கு
மாற்றப்பட்டுள்ளது.
எனினும், ஆசியான் தலைவர் பொறுப்பை மலேசியா ஏற்பதற்கான தயார்
நிலை குறித்து விவாதிப்பதற்காக இன்று பிற்பகல் 1.00 மணிக்கு இந்த
சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படுகிறது என்று அவர் சொன்னார்.
மார்டி புத்தாக்க தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற 2024
அக்ரோஇன்வெட் நிகழ்வைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர்
இதனைத் தெரிவித்தார்.
இந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் தலைநகரில் உள்ள நாடாளுமன்றக்
கட்டிடத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை லாவோசில் நடைபெற்ற 44 மற்றும் 45வது
ஆசியான் உச்சநிலை மாநாட்டின் முடிவில் ஆசியான் தலைவர் பதவியை
லாவோஸ் பிரதமர் சோனேஷாய் ஷிப்போன்டோன் பிரதமர் அன்வாரிடம்
சடங்குப்பூர்வமாக ஒப்படைத்தார்.


