ஷா ஆலம், அக். 15 - கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு
செப்டம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 1972ஆம் ஆண்டு எடை
நிறுவைச் சட்டத்தை (ஏ.டி.எஸ்.) மீறியது தொடர்பில் 12,519 புகார்களை
உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் அமலாக்கப்
பிரிவு பதிவு செய்துள்ளது.
விற்பனைக் கொள்முதல் நடவடிக்கைகளில் எடை மற்றும் அளவு
நிறுவையில் உயர்நெறி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய தமது தரப்பு
சீராகவும் ஆக்ககரமான முறையிலும் மேற்கொண்டு வரும் முயற்சிகளை
இந்த புள்ளி விபரம் பிரதிபலிக்கிறது என்று அமைச்சின் அமலாக்கப் பிரிவு
(தடுப்பு) துணைத் தலைமை இயக்குநர் அரிஸ மாமாட் கூறினார்.
பயனீட்டாளர்களைப் பாதுகாப்பதற்கும் வியாபாரிகள் நிர்ணயிக்கப்பட்டத் தர
நிர்ணயத்தைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கும் உள்நாட்டு வர்த்தக
மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு கடப்பாடு கொண்டுள்ளது. மோசடி
நடவடிக்கையில் ஈடுபடுவோரும் விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களும்
கடுமையான அமலாக்க நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது என்று
அவர் சொன்னார்.
1972ஆம் ஆண்டு எடை நிறுவைச் சட்டத்தின் விதிமுறைகளை
மீறுவோருக்கு கூடுதல் பட்சம் 40,000 வெள்ளி வரை அபராதம்,
மூன்றாண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்மே
விதிக்கப்படும் என்றார் அவர்.
இன்று கோல சிலாங்கூர் வட்டாரத்திலுள்ள மூன்று பெட்ரோல்
நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைக்கு
தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார். இந்த சோதனையில் அமைச்சின் 20 அமலாக்க அதிகாரிகள்
பங்கு கொண்டனர்.
பெட்ரோல் நிலையங்களில் வழங்கப்படும் எரிபொருள் வாடிக்கையாளர்கள்
வழங்கும் தொகைக்கு ஏற்ப சரியாக உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக
இச்சோதனை நடத்தப்பட்டது.


