ஷா ஆலம், அக். 15- வளைகுடா ஒத்துழைப்பு மன்றம் (ஜி.சி.சி.) மற்றும்
சீனாவுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் அடுத்தாண்டு
மலேசியாவின் தலைமையில் நடைபெற இருக்கும் ஆசியான் மாநாடு
தனிச்சிறப்பை பெறவுள்ளது.
சீனாவுடனான ஒத்துழைப்பு தவிர்த்து பாஹ்ரின், குவைத், ஓமான், கட்டார்,
சவூதி அரேபியா, ஐக்கிய அரசு சிற்றரசு ஆகிய நாடுகளின் பங்கேற்பின்
மூலம் புதிய வரலாறு படைக்கப்படவுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் கூறினார்.
தீமோர் லெஸ்தே நாட்டையும் இந்த மாநாட்டில் இணைக்க மலேசியா
முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறிய அவர், இதன் மூலம் பிராந்திய
பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்குரிய வாய்ப்பு ஏற்படும்
என்றார்.
இந்த மாநாடு மாறுபட்டதாக இருக்கும். முதன் முறையாக ஆசியானின்
பத்து உறுப்பு நாடுகள், ஜி.சி.சி பிளஸ் சீனா மற்றும் சீனா ஆகிய
நாடுகளும் நம்முடன் இணையவுள்ளன. அரபு உலகம் மற்றும் சீனா
உள்ளிட்ட புதிய பகுதிகளைக் கண்டறிவதன் மூலம் ஆசியான் வரலாறு
படைக்கும் என அவர் தெரிவித்தார்.
இவையாவும் அடுத்தாண்டில்தான் நடைபெறும். இது தவிர, சீனா,
கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து போன்ற
ஆசியான் கலந்துரையாடல் நாடுகளுடன் நாம் விவாதம் நடத்துவோம்
என்று மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது அவர் சொன்னார்.
இப்பிராந்தியத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு ஏதுவாக
ஆசியான் தலைவர் என்ற முறையில் மலேசியா மூன்று அம்சங்கள் மீது
கவனம் செலுத்தும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
நம்மால் ஒத்துழைப்பை வலுப்படுத்த இயலும் பட்சத்தில் நமது ஆற்றலும்
உயரும். ஏனென்றால் ஆசியான் இலக்கவியல் பொருளாதாரம் உள்பட
இலக்கவியல் உருமாற்றம் மீது மலேசியா தீவிர கவனம் செலுத்தி
வருகிறது என்றார் அவர்.


