(ஆர்.ராஜா)
ஷா ஆலம், அக். 15 - சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இந்திய சமூகத்
தலைவர்கள் (கே.கே.ஐ.) எண்ணிக்கையை உயர்த்த மாநில அரசு
உத்தேசித்துள்ளது. அதே சமயம், அவர்களுக்கு ஒதுக்கப்படும் வருடாந்திர
மானியத்தை அதிகரிக்கவும் கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளது.
பத்தாயிரத்திற்கும் அதிகமான இந்தியர் வாக்காளர்களைக் கொண்ட
தொகுதிகளில் இரண்டு இந்திய சமூகத் தலைவர்களை நியமிப்பதற்கு தாம்
அரசிடம் பரிந்துரைத்துள்ளதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
இதன் வழி தற்போது 62 பேராக உள்ள இந்திய சமூகத் தலைவர்கள்
எண்ணிக்கை உயர்வு காண்பதற்கும் சமூகத்திற்கான சேவைகளை
இன்னும் விரிவான அளவில் அவர்கள் மேற்கொள்வதற்கும் வாய்ப்பு
ஏற்படும் என அவர் தெரிவித்தார்.
அதே சமயம் அவர்களுக்கு ஒதுக்கப்படும் வருடாந்திர மானியத்தை 10,000
வெள்ளியிலிருந்து 20,000 வெள்ளியாக அடுத்தாண்டிற்கான வரவு செலவுத்
திட்டத்தில் உயர்த்துவதற்கு தாம் முன்வைத்த கோரிக்கையை மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கொள்கையளவில் ஏற்றுக்
கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மக்களுடன் மாநில அரசு அணுக்கமான தொடர்பை ஏற்படுத்துவதில்
இந்திய சமூகத் தலைவர்கள் அளப்பரிய பங்கினை வழங்குவதை மந்திரி
புசாரும் ஒப்புக் கொண்டுள்ளதாக இன்று தமது அலுவலகத்தில்
சிலாங்கூர் இன்று சஞ்சிகைக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில் அவர்
கூறினார்.
இந்திய சமூகத்தின் அடிமட்ட மக்களுடன் அணுக்கமான உறவைக்
கொண்டிருக்கும் இந்திய சமூகத் தலைவர்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையிலும் மேலும் ஆக்ககரமான முறையில் சேவையாற்றுவதற்குரிய வாய்ப்பினை அவர்களுக்கு வழங்கும் நோக்கிலும் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய சமூகத் தலைவர்கள் வீடு வீடாகச் சென்று மக்களின்
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதோடு அவர்கள் மக்களுக்கும் சட்டமன்ற
தொகுதி அலுவலகங்களுக்கு இடையிலான இணைப்புப் பாலமாகவும்
விளங்குகின்றனர்.
அதே சமயம், தங்கள் தொகுதியில் இந்தியர்கள் வசிக்கும் இடங்கள்,
அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அறிந்திருக்கும்
அதேவேளையில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும்
அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


