(ஆர்.ராஜா)
கிள்ளான், அக். 14 - இங்குள்ள சிம்பாங் லீமா இந்து மயானத்தின்
நுழைவாயில் வளைவை மீண்டும் அமைப்பதற்கான நடவடிக்கையை தாம்
எடுக்கவுள்ளதாக மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு கூறினார்.
அந்த இடுகாட்டின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த அந்த வளைவு
இலகு ரயில் திட்ட (எல்.ஆர்.டி.) கட்டுமானப் பணிகள் காரணமாக
அகற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
எல்.ஆர்.டி. திட்டம் மேற்கொள்ளப்பட்ட போது அகற்றப்பட்ட அந்த
அலங்கார வளைவை மீண்டும் அமைப்பதற்கு சிலாங்கூர் இந்திய சமூக
நல மரண சகாய இயக்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டி.தட்சணாமூர்த்தி
கோரிக்கை விடுத்திருந்தார். அதன் படி சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சு
நடத்தி அந்த அலங்கார வளைவை மீண்டும் அமைப்பதற்கான
நடவடிக்கையை நான் மேற்கொள்வேன் என அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் இந்திய சமூக நல மரண சகாய இயக்கத்தின் ஏற்பாட்டில்
நேற்று இங்குள்ள சிம்பாங் லீமா இந்த மயானத்தில் நடைபெற்ற இந்து
கல்லறை விழா கூட்டு துப்புரவு இயக்கத்தில் கலந்து கொண்டு
உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.
இந்து மயானங்களைப் பராமரிப்பது மற்றும் ஆதரவற்றோரின்
பிரேதங்களை அடக்கும் செய்வது போன்ற தன்னலமற்றப் பணிகளை
மேற்கொண்டு வரும் இந்த இயக்கத்தின் பொறுப்பாளர்களை தாம் பெரிதும்
பாராட்டுவதாக அவர் சொன்னார்.
பல இடங்களில் இடுகாடுகள் ஆலயங்கள் வசம் உள்ளன. ஆனால், அவை
முறையான பராமரிப்பின்றி காடு மண்டி கிடக்கின்றன. ஆனால் இந்த
அமைப்பினர் வருடந்தோறும் இத்தகைய துப்பரவுப் பணிகளை மேற்கொண்டு இந்த இடுகாட்டை சுத்தமாக வைத்திருப்பது போற்றுதலுக்குரியது என்றார் அவர்.
அதே சமயம், இவர்கள் செய்து வரும் ஆதரவற்றவர்களின் நல்லுடல்களை
அடக்கும் செய்யும் உன்னதப் பணி நமக்கு மட்டுமின்றி நமது
தலைமுறைக்கும் பெரும் புண்ணியத்தைத் தேடித் தரும் என்று அவர்
சொன்னார்.
இந்த கல்லறை விழாவை தாங்கள் கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்டு
வருவதாக சிலாங்கூர் இந்திய சமூக நல மரண சகாய இயக்கத்தின்
தலைவர் டத்தோஸ்ரீ டி.தட்சணாமூரத்தி கூறினார்.
துப்புரவு இயக்கம் தவிர்த்து ஆதரவற்றோர் இறக்கும் பட்சத்தில்
அவர்களின் நல்லுடல்களை முறையாக அடக்கம் செய்யும் பணியை
தாங்கள் பிரதானமாக மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்து மயானங்கள் சுத்தமாக இருப்பதையும் முறையாக
பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்ய அந்தந்த வட்டாரங்களில் உள்ள
பொது அமைப்புகள் இத்தகைய கூட்டு துப்புரவு இயக்கங்களை அடிக்கடி
மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.


