NATIONAL

வாழ்க்கையில்  உயர்வைத் தருவது கல்விச் செல்வம் மட்டுமே! பாப்பாராய்டு வலியுறுத்து

14 அக்டோபர் 2024, 3:07 AM
வாழ்க்கையில்  உயர்வைத் தருவது கல்விச் செல்வம் மட்டுமே! பாப்பாராய்டு வலியுறுத்து

(ஆர்.ராஜா)

செராஸ், அக். 14 - வாழ்வில் ஒருவர் வளமான வாழ்க்கையைப் பெறுவதற்கு கல்வி ஒன்றே ஊன்றுகோள் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.

வறிய நிலையில் இருந்து உன்னத நிலையை எட்டுவதற்கு கல்வி ஒன்றே ஒருவருக்குத் துணை புரியும் என்றார் அவர்.

“நானும் மிகவு‌ம் சிரமமான குடும்பச் சூழலில் இருந்து வந்தவர். சிரமமான சூழ்நிலையிலும்  பெற்றோர் எங்களைப் படிக்க வைத்த காரணத்தில்தான் இன்று நானும் எனது அண்ணனும் அரசாங்க பதவியில் இருக்கிறோம். சமூகத்தில் இன்று நாங்கள் உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் கல்வி ஒன்றுதான் “ என்று இங்கு ஸ்ரீ முருகன் நிலையம் மற்றும் பலாக்கோங் சட்டமன்ற அலுவலகம் ஏற்பாட்டிலான கல்வி புரட்சி நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றுகையில் குறிப்பிட்டார்.

நாட்டில் இந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஸ்ரீ முருகன் நிலையம் ஆற்றி வரும் பங்களிப்பு அளப்பரியது. இதுவரை 28 ஆயிரத்திற்கு மேற்பட்ட  பட்டதாரிகளை உருவாக்கி  பல குடும்பங்களை பொருளாதார ரீதியில் உயர்த்தியுள்ளது.

டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் எம். தம்பிராஜாவால் தோற்றுவிக்கப்பட்ட   ஸ்ரீ முருகன் நிலையம் பலாக்கோங் வட்டார மாணவர்களுக்காக மேற்கொண்ட கல்வி புரட்சி பல குடும்பங்களில் கல்வி தீபத்தை ஒளிர்விடச் செய்யும் என்பது திண்ணம் என்றார்.

இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ஸ்ரீ முருகன் நிலையம் நாடு முழுமையும்  மேற்கொண்டு வரும் டியூஷன் வகுப்புகள் பயன்மிக்கவை என்று நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வெய்ன் ஓங் சுன் வெய் புகழாரம் சூட்டினார்.

“இந்நிலையத்தின் உன்னத பணி ஆயிரக்கணக்கான மாணவர்களை இன்று பல துறைகளில்   உயர் பதவிகளில் அமர்த்தியுள்ளது. இந்நிலையத்தினரின் அர்ப்பணிப்பு உணர்வு பாராட்டத்தக்கது. பலாக்கோங் தொகுதி இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி புரட்சி முக்கிய பங்காற்றும் ” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஒவ்வோர் இந்திய மாணவரும் தனது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு கல்வியும் கட்டொழுங்கும் மிக முக்கியம் என்று நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய ஸ்ரீ முருகன் நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா குறிப்பிட்டார்.

இவரின் உரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியது என்றே கூற வேண்டும்.

இந்நிகழ்ச்சியில்  விஜேந்திரன் - சந்திரமதி தம்பதியினரின் குடும்பம் கல்வி வழி  முன்னேற்றம் கண்ட முன்னுதாரண குடும்பமாக நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.

இவர்களின் மூத்த மகள் ரதிமலர் தேசிய இருதய சிகிச்சை கழகத்தில் (ஐஜேஎன்) மருத்துவராகப் பணி புரியும் வேளையில் மகன் கஜேந்திரன் மேபேங்க் வங்கியில் அதிகாரியாகவும் இளைய மகள் குணவதி பல் மருத்துவராகவும் பணி புரிகின்றனர்.

ஸ்ரீ முருகன் நிலையத்தின் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கணேஷ், குகனேஸ்வரி, அசோக் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்தினர்.

இந்நிலையத்தின் முன்னாள் மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர் தியாகராஜன், சங்கீதா மற்றும் பலாக்கோங் இந்திய சமூக பிரிவு தலைவர் கிறிஸ்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.