அம்பாங் ஜெயா, அக். 13- இம்மாவட்டத்தில் இரண்டு குடியிருப்பு பகுதிகள் நிலச்சரிவு அபாயத்தை எதிர்நோக்குவது கண்டறியப்பட்டுள்ளதாக அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் தெரிவித்தார்.
கம்போங் டத்தோ முஃப்தி சுயிப் மற்றும் கம்போங் புக்கிட் சுங்கை பூத்தே ஆகிய பகுதிகள் மீது கவனம் செலுத்தப் படுவதாக ரோட்ஸியா கூறினார்.
தற்போது, இங்கு வெள்ளம் ஒரு பிரச்சனையல்ல. ஏனென்றால் ஏற்பாடுகள் முழுமையாக தயாராகிவிட்டன. ஆறுகளை ஆழப்படுத்துவதற்கும் கரைகளை வலுப்படுத்துவதற்கும் மாநில அரசு வழங்கிய கணிசமான நிதி உட்பட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் பல்வேறு அமைப்புகளால் ஏற்படுத்தப் பட்டுவருகிறது.
இப்போது நாங்கள் கவலைப்படுவது நிலச்சரிவுகள் குறித்துதான். குடியிருப்பு பகுதிகளில் குறிப்பாக கம்போங் டத்தோ முஃப்தி சுயிப் மற்றும் கம்போங் புக்கிட் சுங்கை பூத்தே மீது இந்த முறை நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என்று அவர் கூறினார்.
இன்று இங்கு நடைபெற்ற அம்பாங் நாடாளுமன்ற நிலையிலான உலக நதிகள் தின கொண்டாட்டத்தில் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் நிலை குறித்து விழிப்புடன் இருக்குமாறு குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டிய ரோட்சியா, மலைச்சாரல்களில் ஆபத்தான அறிகுறிகளைக் கண்டால் ஊராட்சி மன்றங்களை விரைந்து தொடர்பு கொள்ள தயங்காதீர்கள் என்றார்.
இருப்பினும், ஊராட்சி மன்ற மட்டத்தில் நிலச்சரிவு மேலாண்மை தொடர்பாக திறமையானவர்களை உட்படுத்திய சிறப்பு பேரிடர் குழு ஒன்று உள்ளது என்றும் என்று அவர் கூறினார்.







