சுபாங், அக். 13- மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும்
அவரின் துணைவியார் ராஜா ஜரித் சோபியா மூன்று நாள் அதிகாரப்பூர்வ
பயணம் மேற்கொண்டு இன்று காலை புருணை புறப்பட்டனர்.
புருணை சுல்தான் ஹஸானால் போல்கியாவின் அழைப்பின் பேரில்
மாமன்னர் தம்பதியர் இந்த பயணத்தை மேற்கொள்கின்றனர். கடந்த
ஜனவர் 31ஆம் தேதி நாட்டின் பேரரசராக பதவியேற்றப் பின்னர் அரச
தம்பதியர் அந்நாட்டிற்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.
பேரரசர் தம்பதியர் பயணம் செய்த சிறப்பு விமானம் இன்று காலை 9.30
மணிக்கு சுபாங் அரச மலேசிய ஆகாயப் படைத் தளத்திலிருந்து புருணை
புறப்பட்டது.
பேரரசர் தம்பதியருடன் மேதகு ஜோகூர் துங்கு தெமெங்கோங் துங்கு
இட்ரிஸ் இஸ்கந்தார் சுல்தான் இப்ராஹிம் மற்றும் 13 அதிகாரிகளும்
இப்பயணத்தில் இடம் பெற்றுள்ளனர்.
புருணை புறப்படும் முன் ஆகாயப் படைத் தளத்தில் நடைபெற்ற அரச
மலாய் இராணுவத்தின் முதலாவது பட்டாளத்தின் மரியாதை
அணிவகுப்பை மாமன்னர் பார்வையிட்டார். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக
21 மரியாதை குண்டு முழக்கம் எழுப்பப்பட்டதோடு தேசிய கீதமும்
இசைக்கப்பட்டது.
புருணை, இஸ்தானா நுருள் இமானில் மாமன்னர் தம்பதியருக்கு
அரசாங்கம் மரியாதை வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து சுல்தான்
ஹஸனால் போல்கியா மற்றும் ராஜா இஸ்திரி பெங்கிரான் அனாக்
சலோஹா தம்பதியருடன் அவர் சந்திப்பு நடத்துவார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக பண்டார் ஸ்ரீ பகவானில் உள்ள
மலேசியர்களுடன் மாமன்னர் தம்பதியர் சந்திப்பு நடத்துவர். பேரரசியார்
சுல்தான் ஷரிப் அலி பல்கலைக்கழகத்திற்கும் வருகை புரியவிருக்கிறார்.
மலேசியாவுக்கும் புருணைக்கும் இடையே அரச தந்திர உறவுகள் ஏற்பட்டு
40 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கும் வகையிலும் மாமன்னர்
தம்பதியரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.








