ஷா ஆலம், அக் 11: 2021 முதல் செயல்படுத்தப்பட்ட சிலாங்கூர் மனநலம் (சிஹாட்) திட்டம், சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மக்களின் மன நலப் பாதுகாப்பு அம்சம் பராமரிக்கப் படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளீல் ஒன்றாகும்.
இந்த திட்டத்தின் மூலம், சிலாங்கூர் குடிமக்கள் ஆரம்பகால பரிசோதனை சேவைகள், ஹெல்ப் லைன்கள், மனநல சிகிச்சை மானியங்கள், தொகுதி மேம்பாடு மற்றும் ஆலோசகர் பயிற்சி ஆகியவற்றை அனுபவிக்கின்றனர் என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வீட்டில், பள்ளியில், வேலையில் அல்லது பொது இடங்களில் ஆரோக்கியமான மன நிலையின் முக்கியத்துவம் சிலாங்கூர் மாநில அரசு உணர்ந்துள்ளது.
"தேவைப்படுபவர்களுக்கு உதவுவோம், பணியிடத்தை பாதுகாப்பான இடமாக மாற்றுவோம், இதனால் அனைவரும் சிறந்த சேவையை வழங்க முடியும், அதே நேரத்தில் ஒருவருக்கொருவர் பன்முகத்தன்மையை மதிக்க முடியும்," என்று அவர் முகநூலில் 2024 உலக மனநல தினத்தை முன்னிட்டு தெரிவித்துள்ளார்.
சிஹாட் திட்டம் பயன்படுத்த எளிதானது மற்றும் அதை செலாங்கா செயலி மூலம் அணுகலாம் என்றார்.
கோவிட்-19 தொற்று நோய் பாதிப்புக்கு பின் அதிகரித்து வரும் மனநல பிரச்சனைகளை சமாளிக்க மாநில அரசு 500,000 ரிங்கிட் ஒதுக்கீட்டில் சிஹாட் திட்டத்தை அறிமுகப் படுத்தியது.
இந்தத் திட்டம் பயனர்கள் மன ஆரோக்கியத்தின் அளவைத் தாங்களாகவே 'ஸ்ட்ரெஸ் ஸ்கேல்' மற்றும் 'ரிஸ்க் செக்' மூலம் அறிந்து கொள்ள உதவுகிறது.


