NATIONAL

மூன்று தோட்டங்களைச் சேர்ந்த 336 பாட்டாளிகளின் வீட்டுடைமைப் பிரச்சனைக்குத் தீர்வு காண நடவடிக்கை

11 அக்டோபர் 2024, 8:14 AM
மூன்று தோட்டங்களைச் சேர்ந்த 336 பாட்டாளிகளின் வீட்டுடைமைப் பிரச்சனைக்குத் தீர்வு காண நடவடிக்கை
மூன்று தோட்டங்களைச் சேர்ந்த 336 பாட்டாளிகளின் வீட்டுடைமைப் பிரச்சனைக்குத் தீர்வு காண நடவடிக்கை

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், அக். 11- கோல லங்காட் மாவட்டத்திலுள்ள மூன்று தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எதிநோக்கி வரும் வீட்டுடைமைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தும்போக் தோட்டம், டுசுன் டுரியான் தோட்டம் மற்றும் கேரித் தீவு ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 336 குடும்பத்தினரின் சொந்த வீட்டைப் பெறும் கனவு பல்வேறு காரணங்களால் பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்து வருவதாக கோல லங்காட் தொகுதி நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் ராமசாமி கூறினார்.

இந்த மூன்று தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தலைமையில் நேற்று சந்திப்புக் கூட்டம் அவரது அலுவலகத்தில் நடைபெற்றதாகக் கோல லங்காட் கெஅடிலான் தொகுதி தலைவருமான அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கோல லங்காட் மாவட்ட நில அலுவலகம் மற்றும் கோல லங்காட் நகராண்மைக் கழக அதிகாரிகள் இந்த வீடமைப்புத் திட்ட பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான வழிவகைகள் குறித்து விவாதித்ததாக அவர் சொன்னார்.

இம்மாவட்டத்திலுள்ள தும்போக் தோட்டம் விற்கப்பட்டு விட்ட போதிலும் அங்கிருந்த பள்ளி மற்றும் ஆலயத்திற்கு நிலமும் எட்டு குடும்பங்களுக்கு குடியிருப்புகளும் வாக்குறுதியளித்தப்படி இன்னும் வழங்கப்படவில்லை.

அதே போல் டுசுன் டுரியான் தோட்டத்தைச் சேர்ந்த 108 குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டம் கடந்த 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 15 விழுக்காடு மட்டுமே பூர்த்தியான நிலையில் கைவிடப்பட்டது.

மேலும், கேரித் தீவு மற்றும் கோல லங்காட் மாவட்டத்திலுள்ள சைம் டார்பி நிறுவனத்திற்கு சொந்தமான தோட்டங்களில் வசித்த 220 தொழிலாளர்களுக்கு வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படுவதற்கு 40 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அத்திட்டம் தொடர்பில் எந்த மேம்பாடும் காணப்படவில்லை என்று ஹரிதாஸ் குறிப்பிட்டார்.

இந்த மூன்று தோட்டங்களைச் சேர்ந்த 366 குடும்பங்களின் வீட்டுட்மைப் பிரச்சனையை ஆட்சிக்குழு உறுப்பினரும் பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான பாப்பாராய்டு உதவியுடன் இந்த தவணைக்குள் தீர்ப்பதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறோம் என அவர் மேலும் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.