சிரம்பான், அக். 11- நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தனது ஆறு வயது
மகளை படுகொலை செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து
தனித்து வாழும் தாய் ஒருவரை இங்குள்ள உயர் நீதிமன்றம் இன்று
விடுதலை செய்தது.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் குற்றஞ்சாட்டப்பட்டவரான
ஏ.மாரியம்மா (வயது 39) என்ற பெண்மணிக்கு எதிரான குற்றச்சாட்டில்
அடிப்படை முகாந்திரம் உள்ளதை அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறி
விட்டதாக நீதிபதி டத்தோ ரோஹானி இஸ்மாயில் தனது தீர்ப்பில்
கூறினார்.
சாட்சிகள் வழங்கிய சாட்சியங்களைக் கேட்டு, இரு தரப்பின் வாதங்களைச்
செவிமடுத்து, அனைத்து ஆதாரங்களை மதிப்பீடு செய்ததன் அடிப்படையில்
இவ்வழக்கில் அடிப்படை முகாந்திரம் உள்ளதை அரசுத் தரப்பு நிரூபிக்கத்
தவறி விட்டது என்ற முடிவுக்கு வந்துள்ளேன்.
ஆகவே, குற்றஞ்சாட்டப்பட்டவரை எதிர்வாதம் செய்ய அழைக்காமல்
குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து விடுதலையும் செய்கிறேன் என்று நீதிபதி
தெரிவித்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி மாலை மணி 5.30 மற்றும்
6.30க்கு இடைப்பட்ட நேரத்தில் சிரம்பான், ஜாலான் பெர்சியாரான்
செனவாங் 8, மாத்தாஹாரி ஹைட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் தன்
மகளை கொலை செய்ததாக மாரியாம்மா மீது குற்றவியல் சட்டத்தின்
302வது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அரசுத் தரப்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் ஷியாமிமி ஃபர்ஹானா
முகமது ஏ அஜிஸ் வழக்கை நடத்திய வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்
சார்பில் வழக்கறிஞர் எஸ். பால் கிருஷ்ணராஜா மற்றும் எமி சோங்
ஆஜராகினர்.


