கோலாலம்பூ, அக். 11- கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில்
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை உயர்வு
கண்ட வேளையில் பேராக்கில் வெள்ள நிலைமையில் மாற்றமில்லை.
கெடா மாநிலத்தில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 1,163
குடும்பங்களைச் சேர்ந்த 3,655 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்க
வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 1,126 குடும்பங்களைச்
சேர்ந்த 3,496 பேராக இருந்தது.
கோத்தா ஸ்டார், குபாங் பாசு, பொக்கோ செனா மற்றும் பெண்டாங் ஆகிய
மாவட்டங்களைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் மாநிலத்திலுள்ள 24 துயர்
துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகப் பொது தற்காப்பு
படையின் துணை இயக்குநர் முகமது சுஹைமி முகமது ஜைன் கூறினார்.
பெர்லிஸ் மாநிலத்தில் இன்று காலை 8.00 வரை வெள்ள நிலைமையில்
பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை. நேற்றிவு 518 பேராக இருந்த துயர்
துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்கள் எண்ணிக்கை இன்று காலை
519 பேராக உயர்வு கண்டது. இவர்கள் அனைவரும் ஆராவ் மற்றும்
கங்காரில உள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பேராக் மாநிலத்தின் கிரியான் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள இரு
வெள்ள நிவாரண மையங்களில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 136 பேர் தங்க
வைக்கப்பட்டுள்ளதாக மாநிலப் பேரிடர் மேலாண்மை செயலகம் கூறியது.
சங்காட் லோபாக் தேசிய பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள துயர் துடைப்பு
மையத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 71 பேரும் பாகான் செராய், பாரிட்
ஹாஜி அமான் தேசிய பள்ளியில் செயல்படும் நிவாரண மையத்தில் 20
குடும்பங்களைச் சேர்நத 65 பேரும் அடைக்கலம் நாடியுள்ளதாக அது
தெரிவித்தது.


