ஜோகூர் பாரு, அக். 11- தங்கள் குடும்பத்தாருடன் அதிக நேரத்தைச்
செலவிட வேண்டும் என்ற மாநில மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி
செய்யும் நோக்கில் வார விடுமுறையை சனி மற்றும் ஞாயிற்றுக்
கிழமைகளுக்கு மாற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டதாக ஜோகூர் பட்டத்து
இளவரசர் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் கூறினார்.
மாநிலத்திற்கும் மாநில மக்களுக்கும் நன்மைகளையும் லாபத்தையும்
தரக்கூடிய மேம்பாட்டுத் திட்ட அமலாக்கத்தின் அடிப்படையில்
நேர்மறையான பொருளாதார விளைவுகளையும் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இஸ்மாயிலின் ஒப்புதலின் பேரிலும்
ஜோகூர் இஸ்லாமிய மன்றம், மாநில அரசு, அரசு துறைகள் மற்றும்
மாநில மக்களின் கருத்தின் அடிப்படையிலும் வார விடுறையை சனி
மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டது என்று அவர்
நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தார்.
இந்த முடிவு மீது சுய நோக்கத்தின் அடிப்படையில் அதிருப்தி
கொண்டவர்கள் மற்றும் அரசியல் நோக்கங்களுக்காக மக்களிடையே
பிளவை ஏற்படுத்த முயல்வோர் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வார
விடுமுறையை அமல் செய்யும் மாநிலங்களுக்கு தாராளமாக இடம்
பெயரலாம் என்றும் அவர் கூறினார்.
ஜோகூர் மாநிலத்தில் எதிர்வரும் ஜனவரி முதல் தேதி தொடங்கி வார
விடுமுறை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைக்கு மாற்றப்படுவதாக துங்கு
மக்கோத்தா இம்மாதம் 7ஆம் தேதி கூறியிருந்தார்.
ஜோகூர் மாநிலத்தில் முன்பு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்
அனுசரிக்கப்பட்ட வார இறுதி விடுமுறை மாநில சுல்தானின் ஒப்புதலின் பேரில் கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி வெள்ளி மற்றும் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது.
நாட்டில் கிளந்தான், திரங்கானு மற்றும் கெடா ஆகிய மாநிலங்கள் வெள்ளி
மற்றும் சனிக்கிழமைகளில் வார இறுதி விடுமுறையை அமல்படுத்தி
வருகின்றன.


