கோலாலம்பூர், அக். 11- தலைநகர், டத்தோ கிராமாட்டில் உள்ள தாபிஷ்
மையம் ஒன்றைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் காணாமல் போனது
தொடர்பில் தாங்கள் புகாரைப் பெற்றுள்ளதை காவல் துறையினர் நேற்று
உறுதிப்படுத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை தங்களுக்கு புகார்
கிடைத்ததாக வங்சா மாஜூ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது
லாஸிம் இஸ்மாயில் கூறினார்.
அந்த தாபிஷ் மையத்திலிருந்து வெளியேறிய அந்த நான்கு மாணவர்களும்
மீண்டும் அம்மையத்திற்கு திரும்பவில்லை என அப்புகாரில்
கூறப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதோடு
அவர்களைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று
நேற்று பெர்னாமா தொடர்பு கொண்ட போது அவர் தெரிவித்தார்.
எனினும், 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அச்சிறார்களை பற்றிய
மேல் விபரங்களை தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.
அந்த தாபிஷ் மையத்தில் தங்கிருந்த 10 முதல் 12 வயது வரையிலான
நான்கு சிறார்கள் காணாமல் போனது தொடர்பான காணொளி ஒன்று
சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் அவர்களை கண்டுபிடிப்பதில்
உதவ பொதுமக்களை அவர்களின் பெற்றோர்கள் கேட்டுக்
கொண்டனர்.


