NATIONAL

2025 பட்ஜெட்டில் சிலாங்கூருக்கு கூடுதல் நிதி - ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் நம்பிக்கை

11 அக்டோபர் 2024, 3:21 AM
2025 பட்ஜெட்டில் சிலாங்கூருக்கு கூடுதல் நிதி - ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் நம்பிக்கை

ஷா ஆலம், அக். 11- இம்மாதம் 18ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல்

செய்யப்படவுள்ள 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில்

(பட்ஜெட்) தங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என சிலாங்கூர்

எதிர்பார்க்கிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மாநிலம் அளித்து வரும் பங்களிப்புக்கு

ஏற்ப அந்த நிதி ஒதுக்கீடு அமையும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக

வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமான் ஷா

கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலமாக

சிலாங்கூர் விளங்கி வருகிறது. ஆகவே, மாநிலத்திற்கு அதிக ஒதுக்கீட்டை

வழங்குவது அவசியமாகும் என அவர் சொன்னார்.

வெள்ளத் தடுப்புத் திட்டங்களை அமல் செய்வதன் மூலம் மாநிலத்தின்

வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது மற்றும் மாநிலத்திலுள்ள

பின்தங்கிய தரப்பினருக்கு அடிப்படை வசதிகளை உருவாக்குவது

ஆகியவை அதிக செலவு பிடிக்கக்கூடிய திட்டங்களாகும் என அவர்

குறிப்பிட்டார்.

மலேசிய வீடமைப்பு மற்றும் சொத்துடைமை மேம்பாட்டுச் சங்கத்தின்

(ரெட்ஹா) சிலாங்கூர் மாநில மாநாட்டை நேற்று இங்குள்ள செத்தியா

ஆலம் மாநாட்டு மையத்தில் தொடக்கி வைத்தப் பின்னர்

செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்

டத்தோ இங் சுயி லிம், சிலாங்கூர் மாநில ரெட்ஹா தலைவர் டத்தோ

ஜைனி யூசுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநிலத்தில் பல மேம்பாட்டுத் திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்வதற்கு

ஏதுவாக 2025 வரவு செலவுத் திட்டத்தில் பல கவர்ச்சிகரமான சலுகைகளை அரசாங்கம் அறிவிக்கும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த வாரம் கூறியிருந்தார்.

அந்த மேம்பாட்டுத் திட்டங்களில் செமிகண்டக்டர் துறை மேம்பாடு,

வெள்ளத் தடுப்புத் திட்டம், சுபாங் விமான நிலைய மேம்பாடு மற்றும் பல

கூட்டரசு சாலைகளை தரம் உயர்த்துவது ஆகியவையும் அடங்கும் என

அவர் சொன்னார்.

2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை பிரதமரும்

நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இம்மாதம் 18ஆம்

தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.