ஷா ஆலம், அக். 11 - எதிர்வரும் ஜனவரி மாதம் தொடங்கி கட்டுபடி விலை வீடமைப்புத் திட்டங்களுக்கு கட்டண விலக்களிப்பு வழங்கப்படும் என சிலாங்கூர் மாநில அரசு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 2027ஆம் ஆண்டிற்கு இலக்கிடப்பட்டுள்ள 200,000 குடியிருப்புகளுக்கான
இலக்கைத் தாண்டி கட்டுபடி விலை வீடமைப்புத் திட்டங்களுக்கு இந்த விலக்களிப்பு அளிக்கப்படுகிறது என்று வீட்டுவசதி மற்றும் கலாச்சாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா கூறினார்.
மேம்பாட்டாளர்களுக்கு அதிக வாய்ப்பினை (சந்தையில்) வழங்குவதற்கு ஏதுவாக மேம்பாட்டாளர் கட்டணத்தில் விலக்கு அளிக்குமாறு நேற்று முன்தினம் நடைபெற்றக் கூட்டத்தில் பரிந்துரைத்தோம். கட்டுபடி விலை வீடுகள், ரூமா இடமான் மற்றும் ரூமா ஹராப்பான் திட்டங்களுக்கு மட்டுமே இந்த விலக்கு அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
நிபந்தனையற்ற இந்த விலக்களிப்பு 2025 ஜனவரி முதல் அமலாக்கப்படும். எதிர்வரும் நவம்பர் மாதம் மந்திரி புசார் தாக்கல் செய்யவுள்ள 2025 பட்ஜெட்டில் இதன் தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, செத்தியா சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ரெஹ்டா எனப்படும் மலேசிய வீட்டுடைமை மற்றும் சொத்துடைமை சங்கத்தின் சிலாங்கூர் வீட்டுவசதி மாநாட்டில் அவர் கலந்து கொண்டார்.
இதனிடையே, கட்டுபடி விலை வீடமைப்புத் திட்டங்களுக்கான மேம்பாட்டாளர் கட்டணத்திலிருந்து சொத்துடைமை நிறுவனங்களுக்கு விலக்களிக்கும் மாநில அரசின் பரிந்துரையை சிலாங்கூர் மாநில ரெட்ஹா தலைவர் டத்தோ ஜைனி யூசுப் வரவேற்றார்.
மலிவு விலையில் வீடுகளை கட்டும் போது லாபம் ஈட்டுவதில் மேம்பாட்டாளர்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஆகவே, இந்த கட்டண விலக்கு எங்களுக்கு சிறிது நிம்மதி அளிக்கிறது என்று அவர் கூறினார்.


