ஷா ஆலம், அக். 11 - எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில அரசின் பட்ஜெட் நவம்பர் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சிலாங்கூர் சட்டமன்ற சபாநாயகர் லாவ் வெங் சான் தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் 29-ம் தேதி வரை நடைபெறும் சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது இந்த வருடாந்திர விநியோக மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார்.
2025ஆம் ஆண்டுக்கான விநியோக மசோதா தாக்கல் செய்வது ஒரு முக்கியமான விஷயமாக இருக்கும். வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடர் மிகவும் ஆக்ககரமான முறையில் நடக்கும் என எதிர்பார்காகிறேன் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, சிலாங்கூர் பொதுக் காப்புறுதித் திட்ட தனிநபர் தரவு மேலாண்மை தொடர்பான பொது விசாரணைக்கு தகுதி, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான சிறப்புத் தேர்வுக் குழுவின் தலைவருமான லாவ் தலைமை தாங்கினார்.
தேசியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்பாளர் என்ற முறையில் மாநிலத்தின் உத்வேகத்தை உறுதி செய்வதில் 2025ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில பட்ஜெட் புதிய சவால்களை முன்னிலைப்படுத்தும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாகக் கூறியிருந்தார்.
சிலாங்கூரில் முதலாவது செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டு மையத்தை உருவாக்குவதன் மூலம் இலக்கவியல் துறையை மேம்படுத்த தனது நிர்வாகம் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
மாநிலத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் தயார் நிலைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறிய அவர், கடந்த 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் போன்ற எந்தப் பேரிடரையும் எதிர்கொள்ள சிலாங்கூர் மாநிலத்தின் அனைத்து ஏஜென்சிகளையும் ஒருமுகப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


