ஷா ஆலம், அக். 9 - சிலாங்கூரிலுள்ள ஆறுகளில் அந்நிய மீன்களின்
பெருக்கத்தைத் தடுக்க மலேசிய மீன் வளத் துறையின் கீழுள்ள சட்ட
அம்சங்களை மாநில அரசு தற்போது முறைப்படுத்தி வருகிறது.
அந்நிய மீன்களை வளர்ப்போர் மற்றும் உரிய அனுமதியின்றி அவற்றை
வைத்திருப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க மாநில தரை மீன்வளச்
சட்டத்தில் இடமிருப்பதாக விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
இஷாம் ஹஷிம் கூறினார்.
நமது சூழியல் முறைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகரித்து
வரும் அந்நிய மீன்களின் பெருக்கத்தைத் தடுப்பதற்கும் அந்நிய மீன்களால்
உள்நாட்டு மீன்கள் பலியாவதைத் தவிர்ப்பதற்கும் ஏதுவாகக் கடுமையான
சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமாகிறது என்று அவர்
சொன்னார்.
நமது ஆறுகள் மற்றும் வடிகால்களில் அனைத்து விதமான அந்நிய
மீன்களும் நுழைவதைக் கட்டுபடுத்துவதற்கு எல்லாவித
நடவடிக்கைகளையும் நாம் எடுப்போம். அண்மையில் கிள்ளான் ஆற்றில்
கண்டு பிடிக்கப்பட்ட எலிகேட்டர் கார் மீன் வகைகளும் இதில் அடங்கும்
என அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூரிலுள்ள ஆறுகளை அந்நிய மீன்களின் ஆதிக்கத்திலிருந்து
மீட்டெடுப்பதற்கு கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி ஒரு மாதக்
காலத்திற்கு ஆறுகளிலிருந்து பிடிக்கப்படும் ஒரு கிலோ அந்நிய
மீன்களுக்கும் ஒரு வெள்ளி சன்மானம் அளிக்கும் திட்டத்தை மாநில அரசு
அமல்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈக்கான் பண்டாராயா வகை மீன்களைக் காட்டிலும் எலிகேட்டர் கார்
மீன்கள் மிகவும் ஆபத்தானவை எனக் கூறிய அவர், அமெரிக்க கண்டத்திலிருந்து வந்ததாகக் கூறப்படும் இந்த வைகை மீன்களின் ஊடுருவலை மாநில அரசு கடுமையாகக் கருதுகிறது என்றார்.
மாநிலத்திலுள்ள நீர் நிலைகளில் வாழும் இதர வகை மீன்களுக்கு
ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அந்நிய மீன்களை அழிப்பதில் அனைத்து
தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்குரிய நேரம் வந்து விட்டது
என்றார் அவர்.
ஆடவர் ஒருவர் கிள்ளான் ஆற்றில் 16.94 கிலோ எடையுள்ள எலிகேட்டர்
கார் வகை மீனைப் பிடித்ததைச் சித்தரிக்கும் காணொளி ஒன்று சமூக
ஊடகங்களில் அண்மையில் பரவலாகப் பகிரப்பட்டது.


