NATIONAL

சிலாங்கூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 173 பேராக குறைந்தது

8 அக்டோபர் 2024, 4:15 AM
சிலாங்கூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 173 பேராக  குறைந்தது

கோலாலம்பூர், அக். 8- இன்று காலை 8.00 மணி நிலவரப்படி கெடா மற்றும் ஜோகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  மீண்டும் உயர்வு கண்ட வேளையில் சிலாங்கூரிலும்  மலாக்காவிலும் நிலைமை சீரடைந்து வருகிறது.

கெடா மாநிலத்தில் இன்று காலை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள்  எண்ணிக்கை 439 பேராக உயர்வு கண்டது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை  305 பேராக இருந்தது. பாதிக்கப்பட்ட அனைவரும் குபாங் பாசு மாவட்டத்தில் மூன்று துயர் துடைப்பு மையங்களிலும்  பெண்டாங்கிலுள்ள ஒரு துயர் துடைப்பு மையத்திலும் தங்க  வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் காரணமாக குபாங் பாசு மாவட்டத்தில் 252 பேரும்  பெண்டாங்கில் 187 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கெடா மாநில பொது  தற்காப்புப் படையின் துணை இயக்குநர் மேஜர் முகமது சுஹைமி முகமது  ஜைன் கூறினார்.

கெடா மாநிலத்தில் இன்று முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே, ஜோகூர் மாநிலத்தில் உள்ள குளுவாங், பொந்தியான், பத்து பஹாட் ஆகிய மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள மூன்று துயர் துடைப்பு  மையங்களில் 601 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை செயல் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் அஸ்மி  ரோஹானி தெரிவித்தார்.

நேற்றிரவு இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள நிவாரண மையங்களில்  582 பேர் மட்டுமே தங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டார். மாநிலத்தின் அனைத்து பத்து மாவட்டங்களிலும் வானிலை தெளிவாக இருக்கும் எனக் கணிக்கப்  பட்டுள்ளதாக கூறிய அவர், பத்து பஹாட்டில் உள்ள சுங்கை  செம்புரோங் ஆற்றில் நீர் மட்டம் எச்சரிக்கை நிலையில் உள்ளது என்றார்.

பேராக் மாநிலத்தில் நேற்றிரவு 298 பேராக இருந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 297 பேராக குறைந்துள்ளது என்று பேரிடர் மேலாண்மை செயலகம் குறிப்பிட்டது. அவர்கள் அனைவரும் கிரியான், ஹிலிர் பேராக் மற்றும் தைப்பிங்கில் திறக்கப்பட்டுள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.

சிலாங்கூர் மாநிலத்தின் கோம்பாக் மற்றும் கோல சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மூன்று துயர் துடைப்பு மையங்களில் 173 பேர் தங்கியுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 186 பேராக இருந்தது. மலாக்காவில் நேற்றிரவு 23ஆக இருந்த வெள்ள அகதிகள் எண்ணிக்கை இன்று காலை 22 பேராக குறைந்துள்ளது. அவர்கள் அனைவரும் ஜாசின், தெஹேல் தேசிய பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.