கோலாலம்பூர், அக். 8 - ஆர்.எச்.பி. லெக்காஸ் ஹைவே ரைட் 2024 சைக்கிள் பந்தயத்திற்கு வழி விடும் வகையில் காஜாங்-சிரம்பான் (லெக்காஸ்) நெடுஞ்சாலை வரும் 12ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.00 மணி வரை போக்குவரத்துக்கு மூடப்படும்.
இந்த சைக்கிளோட்ட நிகழ்வு சனிக்கிழமை இரவு 7.45 மணிக்கு தொடங்கும் என்று
காஜாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோப் கூறினார்.
சிரம்பான் செல்லும் லெக்காஸ் நெடுஞ்சாலையின் இரண்டாவது கிலோமீட்டர் பகுதி, பண்டார் டெக்னாலஜியை நோக்கிய லெக்காஸ் நெடுஞ்சாலை மற்றும் லெக்காஸ் நெடுஞ்சாலையின் செமினி நுழைவாயில் ஆகியவையே மூடப்படவிருக்கும் சாலைகளாகும் என அவர் தெரிவித்தார்.
எக்கோ ஹில் செல்லும் லெக்காஸ் நெடுஞ்சாலை, ஜாலான் பாங்கி லாமா நோக்கிச் செல்லும் லெக்காஸ் நெடுஞ்சாலை மற்றும் லெகாஸ் நெடுஞ்சாலை நோக்கிச் செல்லும் எக்கோ மெஜஸ்டிக் சாலை ஆகியவையும் மூடப்படுகின்றன என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அன்றைய தினம் சம்பந்தப்பட்ட சாலைகள் வழியாக செல்வதை தவிர்க்கும் அதேவேளையில் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடவும் பணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்கவும் பொதுமக்களை அறிவுறுத்துகிறோம் என்றார் அவர்.
இந்த நிகழ்வு சீராகவும் பாதுகாப்பாகவும் நடைபெற பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை என்றும் அவர் கூறினார்.


