கோத்தா திங்கி, அக். 7 - கடந்த சனிக்கிழமை இங்கு நடைபெற்ற 2024 பான் ஆசிய அனைத்துலக ஓட்டப் பந்தயத்தின் போது அநாகரீகமான மற்றும் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதன் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு வெளிநாட்டினர் மீது இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறுபத்தாறு மற்றும் 70 வயதுடைய அவ்விருவர் மீதும் குற்றவியல் சட்டத்தின் 294 (ஏ) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்படும் என்று ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
அண்மையில் இங்குள்ள பண்டார் பெனாவாரில் உள்ள டே சாருவின் ஒரு பொது இடத்தில் நாகரீகமாகவும் அவமதிக்கும் விதமாகவும் மற்றும் மத உணர்வை தொடும் வகையில் சில பங்கேற்பாளர்கள் நடந்து கொண்ட 2024 பான் ஆசியா போட்டி தொடர்பான விசாரணையை நாங்கள் முடித்துள்ளோம்.
விசாரணை அறிக்கை நேற்று மாநில அரசு சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட. சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்ட படுவதற்கான அறிவுறுத்தலை நாங்கள் பெற்றுள்ளோம் என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட மூவர் நேற்று கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் ஓட்டப் பந்தயத்தின் போது அணிந்திருந்த ஆடைகள் மற்றும் ஆபரணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
- பெர்னாமா


