NATIONAL

புக்கிட் காசிங் தொகுதியில் இம்மாதம்19ஆம் தேதி தீபாவளி பற்றுச் சீட்டுகள் வழங்கப்படும்

7 அக்டோபர் 2024, 4:30 AM
புக்கிட் காசிங் தொகுதியில் இம்மாதம்19ஆம் தேதி தீபாவளி பற்றுச் சீட்டுகள் வழங்கப்படும்

ஷா ஆலம், அக்.7- இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புக்கிட் காசிங் தொகுதியைச் சேர்ந்த வசதி குறைந்த 400 குடும்பங்களுக்கு ஜோம் ஷோப்பிங் தீபாவளி பற்றுச் சீட்டுகள் வழங்கப்படும்.

இந்த பற்றுச் சீட்டுகளை வழங்கும் நிகழ்வு இம்மாதம் 19ஆம் தேதி பிஜேஎஸ்2 மாத்தாஹரி  பேரங்காடியில் நடைபெறும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜீவ் கூறினார்.

இலவசப் பற்றுச் சீட்டுகளைப் பெற்றவர்கள் அதனைப் பயன்படுத்தி அன்றைய தினம்  அந்த பேரங்காடியில் தீபாவளிக்குத் தேவையான  அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டார்.

இந்த பற்றுச் சீட்டு களுக்கு விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 16 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக கூறிய அவர், மாநில அரசின் உதவித் திட்டங்களான எஸ்.எம்.யு.இ., எஸ்.எம்.ஐ.எஸ். மற்றும் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வுத் திட்டத்தில் பங்கு பெறாத தொகுதி மக்கள் இந்த பற்றுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்றார்.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோர் மாதம் 3,000 வெள்ளிக்கும் குறைவாகக் குடும்ப வருமானம் பெறுபவர்களாகவும் புக்கிட் காசிங்  தொகுதி வாக்காளர்களாகவும் இருப்பது அவசியம் என அவர் கூறினார்.

தீபாவளியைக் கொண்டாடுவதில் வசதி குறைந்தவர்கள் எதிர்நோக்கும் பொருளாதாரச் சுமையை குறைக்கும் நோக்கில் மாநில அரசு தலா 200 வெள்ளி மதிப்புள்ள பற்றுச் சீட்டுகளை மாநில அரசு வழங்கி வருகிறது.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு 44 லட்சம் வெள்ளி செலவில் 22,000 இலவசப் பற்றுச் சீட்டுகளை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. மாநிலத்திலுள்ள 56 தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படும் வசதி குறைந்தவர்களுக்கு இந்த பற்றுச் சீட்டுகள் வழங்கப்படும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.