NATIONAL

2025 பட்ஜெட்- சம்பள மறுசீரமைப்பு தொடர்பான அறிவிப்பு 16 லட்சம் அரசு ஊழியர்களின் கவனத்தை ஈர்க்கும்

7 அக்டோபர் 2024, 4:25 AM
2025 பட்ஜெட்- சம்பள மறுசீரமைப்பு தொடர்பான அறிவிப்பு 16 லட்சம் அரசு ஊழியர்களின் கவனத்தை ஈர்க்கும்

கோலாலம்பூர், அக். 7- இம்மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள 2025ஆம்

ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்

இப்ராஹிம் வெளியிடும் பொதுச் சேவைத் துறை சம்பள முறை

(எஸ்.எஸ்.பி.ஏ.) தொடர்பான அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள 16 லட்சம்

அரசு ஊழியர்களின் கவனத்தை ஈர்க்கும் அம்சமாக விளங்கும்.

பொதுச் சேவைத் துறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட

இந்த புதிய சம்பள முறை, அரசு ஊழியர்கள் கட்டங் கட்டமாக சம்பள

உயர்வு பெறுவதை உறுதி செய்வதில் அரசாங்கம் கொண்டுள்ள

கடப்பாட்டையும் புலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

முதல் கட்ட சம்பள மறுசீரமைப்பு வரும் டிசம்பர் 1ஆம் தேதியும்

இரண்டாம் கட்ட சம்பள மறுசீரமைப்பு ஏதிர்வரும் 2026 ஜனவரி 1ஆம் தேதியும்

அமலுக்கு வரும்

இந்த சம்பள மறுசீரமைப்பின் கீழ் திட்ட அமலாக்க தரப்பினர், நிர்வாக

மற்றும் நிபுணத்துவப் பிரிவினர் 15 விழுக்காட்டு சம்பள உயர்வைப்

பெறுவர். உயர் மேலாண்மைப் பிரிவு அதிகாரிகளுக்கு ஏழு விழுக்காட்டு

ஊதிய உயர்வு வழங்கப்படும்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு

பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஏற்ப

இச்சம்பள மறுசீரமைப்பு விலைவாசி அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள

சுமையைக் குறைக்க உதவும் என்று தகவல் அதிகாரி மாஜிசுல் டானி

(வயது 38) நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த 2025 வரவு செலவுத் திட்டம் அரசு ஊழியர்களின் சமூக நலனில்

குறிப்பாக பொருத்தமான வருமான வரி விலக்களிப்பு சலுகைகளை

வழங்குவதில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கிறோம் என அவர்

தெரிவித்தார்.

முதல் கட்ட சம்பள மறு ஆய்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் அமலுக்கு

வந்தாலும் இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சிறப்பு

நிதியுதவித் திட்டத்தை அரசாங்கம் தொடரும் என தாம் எதிர்பார்ப்பதாக

ஷா ஆலம் சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் பாலிடெக்னிக் அதிகாரி

ஹெர்லினா அய்னிஜவாத்தி ஜக்காரியா (வயது 40) கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.