இஸ்லாமாபாத், அக். 3- பாகிஸ்தானுக்கான மூன்று நாள் அதிகாரப்பூர்வ
பயணம் மேற்கொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று
இஸ்லாமாபாத் சென்றடைந்தார்.
பிரதமர் பயணம் செய்த சிறப்பு விமானம் ராவல்பிண்டி நுர் கான் விமானப்
படைத்தளத்தில் உள்நாட்டு நேரப்படி நேற்றிரவு 7.55 மணியளவில் தரையிறங்கியது.
விமான நிலையத்தில் பிரதமன் அன்வாரை பாகிஸ்தான் பிரதமர் ஷபாஷ்
ஷாரிப், அந்நாட்டின் வர்த்தக அமைச்சல் ஜமால் கமால் கான், வெளியுறவு
அமைச்சின் நெறிமுறை பிரிவுத் தலைவர் திப்பு சுல்தான்,
மலேசியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சைட் அஷான் ஆகியோர்
வரவேற்றனர்.
பிரதமரின் இந்த பயணக் குழுவில் முதலீடு, வர்த்தகம் மற்றும்
தொழிலியல் அமைச்சர் தெங்கு டத்தோ ஸப்ருள் தெங்கு அஜிஸ் அஜிஸ்,
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான், பாகிஸ்தானுக்கான
மலேசியத் தூதர் அஸார் மஸ்லான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
விமான நிலையத்தில் பிரதமருக்கு 21 துப்பாக்கி குண்டு முழக்கத்துடன்
சிறப்பு கம்பள வரவேற்பு நல்கப்பட்டது. பின்னர் அவர் பாகிஸ்தான்
இராணுவப் படை வீரர்கள் நடத்திய மரியாதை அணிவகுப்பையும்
பார்வையிட்டார்.
பிரதமரின் பாகிஸ்தானுக்கான வருகையை அந்நாட்டு அரசாங்கம்
அரசாங்க வருகையாக தரம் உயர்த்தியுள்ளதாக மலேசியத் தூதர் அஸார்
நேற்று மலேசிய ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அந்த அணுவாயுத நாட்டிற்கான இந்த மூன்று நாள் பயணத்தின் போது
பிரதமர் இடைவிடாத நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டுள்ளார். பிரதமரின்
அதிகாரத்துவ இல்லத்தில் பிரதமர் ஷாபேஷ் ஷரிப்புடன் கட்டுப்படுத்தப்பட்ட பிரத்தியேச் சந்திப்பை நடத்தும் பிரதமர் பின்னர் இரு நாட்டு பேராளர்கள் பங்கேற்கும் இரு தரப்பு கூட்டத்திலும் பங்கேற்பார்.
இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகவிருக்கும் பல புரிந்துணர்வு
ஒப்பந்த நிகழ்வுகளையும் பிரதமர் பார்வையிடுவார்.


