NATIONAL

தென் லெபனானில் மலேசிய அமைதி காப்புப் படையினர் பாதுகாப்பாக உள்ளனர்

3 அக்டோபர் 2024, 4:53 AM
தென் லெபனானில் மலேசிய அமைதி காப்புப் படையினர் பாதுகாப்பாக உள்ளனர்

கோலாலம்பூர், அக். 3 - தென் லெபனானில் நிலை கொண்டுள்ள மலேசிய அமைதி காப்புப்படை (மல்பாட்) 850-11 உறுப்பினர்கள், சொத்துக்களுக்கு எந்த சேதமும் இன்றி பாதுகாப்பாக இருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கும் ஹெஸ்புல்லாவுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக ரோந்து அல்லது தளவாட இயக்கங்களை நடத்த வேண்டாம் என்பதோடு அந்தந்த நிலைப்பாட்டில் இருக்குமாறு மல்பாட் 850-11 உட்பட லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் படையின் (யுனிஃபில்) கீழ் உள்ள அனைத்து அமைதி காக்கும் படையினரும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நிலைமை கட்டுக்குள் வரும் வரை நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின் படி பதுங்கு குழி பயிற்சிகளை யுனிஃபில் தலைமையகம் அமல்படுத்தியுள்ளது.

செயல்பாட்டு பகுதியில் உள்ள  பாதுகாப்பு நிலை மற்றும்  அச்சுறுத்தல்களின் அடிப்படையில் யுனிஃபில்லின் ஒப்புதலின் அடிப்படையில் மல்பாட் 850-11 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை மலேசியாவிற்கு திரும்பப் பெறுவதற்கான எந்தவொரு திட்டமும்  அமல்படுத்தப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.

தென் லெபனானில் உள்ள நிலைமையை பாதுகாப்பு அமைச்சும் மற்றும் மலேசிய ஆயுதப்படைகளும் தொடர்ந்து கண்காணித்து வரும் வேளையில்  மால்பாட் 850-11 தொடர்பான முன்னேற்றங்கள் குறித்த சமீபத்திய நிலவரங்களை அது வழங்கும் என்றும் காலிட் கூறினார்.

கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி முதல்  இஸ்ரேலியப் படைகள் லெபனான் மீது முன்பு எப்போதும் போதும் இல்லாத வகையில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

கடந்தாண்டு அக்டோபர் 8 முதல் காஸா பகுதியில்  ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே பதட்டம்  நீடித்து வரும் நிலையில் லெபனான்-இஸ்ரேல் எல்லையில் ஹெஸ்புல்லா மற்றும் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.