புத்ராஜெயா, அக். 3 - மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான ‘பி1‘ மற்றும்
‘பி2‘ வகுப்பு லைசென்ஸ்களை ‘பி‘ பிரிவுக்கு மாற்றுவதற்கான சிறப்புத்
திட்ட நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தில் பங்கேற்கும் தகுதியை இழந்த தரப்பினர் எழுப்பிய
மனக்குமுறல்ளின் எதிரொலியாக இந்த நிபந்தனைத் தளர்வு நேற்று
உடனடியாக அமல்படுத்தப்பட்டது என்று போக்குவரத்து அமைச்சர்
அந்தோணி லோக் கூறினார்.
மோட்டார் சைக்கிள்களுக்கான பி லைசென்ஸ் பெற விரும்புவோர் பி1
மற்றும் பி2 லைசென்ஸ்களை குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு
தொடர்ச்சியாக புதுப்பித்து வைத்திருக்க வேண்டும் என்பது அந்த
நிபந்தனைகளில் ஒன்றாகும் என்று அவர் சொன்னார்.
இவ்விவகாரம் தொடர்பில் பொது மக்களின் கருத்துகளை கவனத்தில்
கொண்டு போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ எடி
ஃபாட்லி ரம்லியுடன் விவாதித்து நிபந்தனைகளைத் தளர்த்தும் முடிவுகளை
தாங்கள் எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
இதன் வழி பி வகுப்பு லைசென்ஸ் பெறுவதற்கு மோட்டார்
சைக்கிளோட்டும் லைசென்ஸ்களை பத்து ஆண்டுகளுக்கு மேல்
பயன்பாட்டில் வைத்திருந்தால் போதுமானது. முன்பு அறிவிக்கப்பட்டதைத்
போல் தொடர்ச்சியாக புதுப்பித்து வைத்திருக்க வேண்டிய
அவசியமில்லை என்றார் அவர்.
கடந்த 2020ஆம் ஆண்டு கோவிட்-19 காரணமாக அமல்படுத்தப்பட்ட
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் வாகனமோட்டும்
லைசென்ஸ்களை புதுப்பிக்க இயலாத சூழல் நிலவியதால் இந்த
நிபந்தனை நியாயமற்றது என பொது மக்கள் கூறியிருந்தனர் என அவர்
குறிப்பிட்டார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது வாகன லைசென்ஸ்கள்
புதுப்பிப்பதிலிருந்து அனைத்து வாகனமோட்டிகளுக்கும் அரசாங்கம் விதி
விலக்களித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


