கோலாலம்பூர், அக். 2- வழக்குகளில் சாட்சிப் பொருள்களாக தாக்கல்
செய்யப்பட்ட பல்வேறு வகையான போதைப் பொருள் மற்றும்
தடைசெய்யப்பட்ட வஸ்துகளை பதப்படுத்தும் உபகரணங்களை
கோலாலம்பூர் போலீசார் அழித்துள்ளனர்.
கடந்த 2003ஆம் ஆண்டு முதல் கடந்தாண்டு வரை திறக்கப்பட்ட 2,844
விசாரணை அறிக்கைளை உட்படுத்திய 474.7 கிலோ போதைப் பொருள்
மற்றும் 982.287 லிட்டர் திரவமய போதைப் பொருள் இந்நடவடிக்கையின்
போது அழிக்கப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ
ருஸ்டி முகமது ஈசா கூறினார்.
இந்த போதைப் பொருள்கள் மற்றும் உபகரணங்கள் யாவும் தேசிய
போலீஸ் படைத் தலைவரின் உத்தவு ஆணை டி207க்கு (வழக்குப்
பொருள்கள் அழிப்பு) ஏற்ப நெகிரி செம்பிலான், புக்கிட் பெலாண்டோக்கில்
உள்ள குவாலிட்டி ஆலம் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் கழிவுப் பொருள்
சுத்திகரிப்பு மையத்தில் அழிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அழிக்கப்பட்ட போதைப் பொருள்களில் 3 கோடியே 44 லட்சத்து 30 ஆயிரம்
வெள்ளி மதிப்புள்ள 385.530 கிலோ மெத்தம்பெத்தமின், 10 லட்சத்து 50
ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள 70.244 கிலோ எம்.டி.எம்.ஏ. போதைப் பொருள்,
308,000 வெள்ளி மதிப்புள்ள 8.670 கிலோ ஹெரோயின் மற்றும் 433,000
வெள்ளி மதிப்புள்ள 8.671 கிலோ கஞ்சா ஆகியவையும் அடங்கும் என்று
அவர் சொன்னார்.
இன்று கோலாலம்பூர் மாநகர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.


