கோலா திராங்கானு, அக். 2: தொலைபேசி வழி , ஒரு மோசடி பேர் வழியால் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவருக்கு 201,900 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது.
ஆகஸ்ட் 31 அன்று பாதிக்கப்பட்ட 65 வயதுப் பெண்மணிக்கு அம்பாங் மருத்துவ
மையத்தின் ஊழியர் எனக் கூறிக்கொள்ளும் தனிநபரிடமிருந்து அழைப்பு வந்ததாக
கோலா திரங்கானு மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் நோர் கூறினார்.
சந்தேக நபர் பாதிக்கப்பட்டவருக்கு RM 68,800 இன் காப்பீட்டுக் கோரிக்கை இருப்பதாக
தெரிவித்தார். ஆனால் பாதிக்கப்பட்டவர் அதை மறுத்தார்.
"தனிப்பட்ட தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக காவல்துறையில் புகார்
அளிக்குமாறு சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கேட்டார்," என்று அறிக்கை
ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
செப்டம்பர் 24 அன்று, சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை மீண்டும் தொடர்பு
கொண்டு, பேங்க் நெகாரா மலேசியாவின் கண்காணிப்பு நோக்கத்திற்காக, RM5,000
ஆரம்ப வைப்புத் தொகையுடன் அக்ரோ வங்கியில் ஒரு கணக்கைத் திறக்கும்படி
அறிவுறுத்தினார்.
பின், பாதிக்கப்பட்டவர் தனது தபோங் ஹாஜி கணக்கிலிருந்து புதிதாக தொடங்கப்பட்ட
அக்ரோ வங்கிக் கணக்கிற்கு மொத்தம் RM201,900 ஐ மாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.
"தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண்மணி தனது மகனிடம் நடந்த சம்பவத்தை
பகிர்ந்து கொண்டார், அவருடைய மகன் உடனடியாக அக்ரோ வங்கியில் இருப்பை
சரிபார்த்தார்," என்று அஸ்லி விளக்கினார்.
பரிசீலனையின் முடிவில் பாதிக்கப்பட்டவரின் கணக்கில் RM100 மட்டுமே இருப்பது
தெரிய வந்தது. குறிப்பிட்ட கணக்கில் இருந்து தெரியாத வங்கிக் கணக்கிற்கு 20
பரிவர்த்தனைகள் செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
இந்தப் பணம் பாதிக்கப்பட்டவரின் ஓய்வூதிய மற்றும் அவரின் சேமிப்பு ஆகும்; என்று அஸ்லி கூறினார்.
– பெர்னாமா


