ஷா ஆலம், அக். 2- பொருத்தமான விவரிப்பு நடவடிக்கை மற்றும்
கடினமான முடிவுகளை அமல்படுத்தும் தைரியம் ஆகியவை அமெரிக்க
டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு கண்டு உலகிலேயே
சிறப்பான அடை நிலையைப் பதிவு செய்வதற்குரிய வாய்ப்பினை
ஏற்படுத்தியது என்று பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி கூறினார்.
ரிங்கிட்டின் மதிப்பை உயர்த்துவதில் அனைத்து தரப்பினரும் கவனம்
செலுத்தினால் 13வது மலேசியத் திட்டத்தின் கீழ் மலேசியாவை
மேம்பாடடைந்த நாடாக உருவாக்குவதற்குரிய வாய்ப்புள்ளதாக என்று
அவர் தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் தொடங்கி நமது பங்கு சந்தையில் நிதி ஓட்டத்தை
நாம் கண்டு வந்தோம். பொருத்தமான விவரிப்புகளைத் தயார்படுத்தியது
மற்றும் கடினமான முடிவுகளை எடுத்தது ஆகியவை அதற்கான
காரணங்களில் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
சவால்கள் அல்லது விமர்சனங்களுக்கு மத்தியிலும் சரியான ஒன்றை நாம்
தொடர்ந்து செய்தால் மற்றும் பிறரை இங்கு ஈர்க்கக் கூடிய போட்டியிடும்
ஆற்றலின் கூடுதல் சாதகம் மீது கவனம் செலுத்தினால் நாம்
எதிர்பாராமல் நடக்கக்கூடிய வெளிப்புற நிகழ்வுகளைச் சமாளிக்க இயலும்
என்று அவர் கூறினார்.
நேற்று இங்கு, சிலாங்கூர் மாநில அரசுடன் 13வது மலேசியத் திட்ட
கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் நடைபெற்ற
செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த
கலந்துரையாடல் நிகழ்வை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
தொடக்கி வைத்தார்.
ரிங்கிட்டின் நடப்பு அடைவு நிலை அனைத்துலக முதலீட்டாளர்கள்
மத்தியில் மலேசியா மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளதாகக்
கூறிய ரபிஸி, இந்த சாதகமான சூழலை வர்த்தகர்களும்
முதலீட்டாளர்களும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
நம் மீது நம்பிக்கைக் கொண்டுள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள்
மலேசியா மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். இந்த வாய்ப்பினை
அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.


