NATIONAL

லெபனானிலிருந்து 15 மலேசியர்களை மீட்க விஸ்மா புத்ரா நடவடிக்கை

2 அக்டோபர் 2024, 1:55 AM
லெபனானிலிருந்து 15 மலேசியர்களை மீட்க விஸ்மா புத்ரா நடவடிக்கை

புத்ராஜெயா, அக். 2 - லெபனான் நாட்டில்  பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதைத்  தொடர்ந்து அங்குள்ள 15 மலேசியர்கள் மற்றும் அவர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத்  துணைவியர் மூவரை பெய்ரூட்டில் உள்ள தூதரகம் மூலம் வெளியேற்ற வெளியுறவு அமைச்சு  தயாராகி வருகிறது.

ஒன்பது மலேசியர்கள் சுயமாக நாட்டை விட்டு வெளியேறிய வேளையில் மேலும் நான்கு மலேசியர்கள் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

அடுத்த அறிவிப்பு வரும் வரை நான்கு மலேசிய ஊழியர்களுடன் தூதரகம் செயல்படும் என்று அது குறிப்பிட்டது.

லெபனானுக்கு எதிராக வான்வழித்  மற்றும் தரைவழித் தாக்குதல்கள் மூலம் இஸ்ரேலின் ஸியோனிச ஆட்சியாளர்கள் நடத்தி வரும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பை மலேசியா வன்மையாக  கண்டித்துள்ளது.

ஸியோனிச ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை மட்டுமின்றி லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் அப்பட்டமாக மீறுகின்றன. இது  ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் அனைத்துலகச் சட்டத்திற்கு புறம்பானதாகும் என்று அது கூறியது.

இப்பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை அதிகரிக்காமல் இருப்பது அனைத்து தரப்பினருக்கும் இன்றியமையாதது என்றும் அமைச்சு தெரிவித்தது.

மலேசியா லெபனானுடன் ஒன்றுபட்டு நிற்கிறது. லெபனானில் மேலும் மனிதாபிமான பேரழிவு ஏற்படுவதைத் தடுக்க அவசர போர் நிறுத்தத்திற்கு அனைத்துலக சமூகத்துடன் இணைந்து மலேசியாவும் குரல் கொடுக்கிறது  என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.