கோலாலம்பூர், அக்.1 - மலேசியா தனது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப செயல்
திட்டத்தை அடுத்த 12 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு வைத்துள்ளது என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்த காலக்கெடுவிற்குள் முடிக்க இலக்கு வைக்கப்பட்ட பல முக்கிய
தொழில்நுட்பங்களில் இதுவும் ஒன்றாகும் என்று அவர் கூறினார், அதே நேரத்தில் அதை
விரைவில் அடைய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“என்னைப் பொறுத்தவரை, 12 மாதங்கள் காத்திருக்க தேவையில்லை, அதை ஆறு
மாதங்களில் முடிக்க முடியும், ”என்று அவர் கூகுள் மலேசியா நிகழ்வான மாந்தாப்
மலேசியா பெர்சாமா AI இல் கூறினார்.
அந்நிகழ்வில் டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் முதலீடு, வர்த்தகம்
மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ்
ஆகியோரும் உடன் இருந்தனர்.
மலேசியாவில் உள்ள முக்கியத் துறைகளில் AI-ஐ அரசாங்கம் விரைவுபடுத்தும் என்று
பிரதமர் கூறினார், இந்த தொழில்நுட்பம் அரசாங்க நிறுவனங்களுக்கு செயல்முறைகளை
மேம்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும், மக்களுக்குச் சிறப்பாகச் சேவை வழங்கவும்
உதவும் என்று வலியுறுத்தினார்.
“குறிப்பிடத்தக்க உதாரணம், கூகுளின் கிளவுட் தொழில்நுட்பத்தில் DELIMA
இயங்குதளத்தை கல்வி அமைச்சகம் உருவாக்கியது. அது கல்வித் தரத்தை
மேம்படுத்துவதற்கும் கற்றல் அனுபவத்தை மாற்றியமைப்பதற்கும் பெரும் பங்களிப்பதை
நான் பார்த்திருக்கிறேன், மேலும், அத்திட்டம் ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கிறது என்றார்.
“மலேசியாவில் இன்று 5.5 மில்லியன் மாணவர்களும் ஆசிரியர்களும் DELIMA தளத்தைப்
பயன்படுத்துகிறார்கள் என்பதைக் குறிப்பிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த
திட்டத்தை முழு அரசும் பின்பற்ற வேண்டும். நாளை நடைபெறும் அமைச்சரவை
கூட்டத்தில் இந்த விவகாரத்தை எழுப்புவேன், என்றார்.
- பெர்னாமா


