கோலாலம்பூர், அக். 1- நாட்டில் முப்பது வயதுக்கும் குறைவான சுமார் 53,000 பேரின் ஒட்டுமொத்த கடன் தொகை 190 கோடி வெள்ளியை எட்டியுள்ளதை கடன் ஆலோசக மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் (ஏ.கே.பி.கே.) தரவுகள் காட்டுகின்றன.
நாட்டில் வேலை செய்யும் மலேசியர்களில் 28 விழுக்காட்டினர் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கடன் பெற்றுள்ளதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமிர் ஹம்சான் அஜிசான் கூறினார்.
கடனுதவித் திட்டங்கள், கிரெடிட் கார்டு எனப்படும் கடன் பற்று அட்டைகள், குறிப்பாக ‘இப்போது வாங்குங்கள், பின்னர் செலுத்துங்கள்‘ என்னும் திட்டம் போன்ற கடன் அணுகல் வாய்ப்புகள் நாட்டில் அதிகரித்து வருவது கவலை அளிக்கும் வகையில் உள்ளது என்று அவர் சொன்னார்.
இத்தகைய திட்டங்கள் நமக்கு வசதியை வழங்கும் அதேவேளையில் விளைவுகள் தொடர்பான புரிதல் இல்லாமை மற்றும் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் கட்டொழுங்கின் மை போன்ற குறைபாடுகள் கற்பனைக்கு எட்டாத கடன் சுமைக்கு நம்மைத் தள்ளி விடும் என அவர் எச்சரித்தார்.
இன்று இங்கு 2024 ஆம் ஆண்டிற்கான நிதி கல்வி விழிப்புணர்வு மாத தொடக்க நிகழ்வில் அவர் தெரிவித்தார்.
மலேசியர்களில் 36 விழுக்காட்டினர் மட்டுமே கடன் விகிதம், பணவீக்கம், பல்வகைப்படுத்தல் ஏற்படுத்தும் சிக்கல்கள் போன்ற நிதியியல் கோட்பாடுகள் குறித்து அறிந்துள்ளதை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் நிதிக் கல்வி மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வு காட்டுகிறது என்று அவர் சொன்னார்.
இந்த எண்ணிக்கை உலக சராசரி அளவான 42 விழுக்காட்டைக் காட்டிலும் குறைவாகும். நிதியில் கல்வி தொடர்பான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 39 நாடுகளில் மலேசியா 26வது இடத்தில் உள்ளது என அவர் கூறினார்.
குறைவான நிதியில் கல்வி விழிப்புணர்வு கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறிய அமிர், இதனால் மலேசியர்கள் மத்தியில் குடும்பக் கடன் அதிகரித்து வருகிறது என்றார்.


