ஷா ஆலம், அக். 1- மாணவர்களுக்கு அறிவாற்றலை வழங்குவதில்
மிதமான மதிப்புக் கூறுகளுக்கு (வாஸத்திய்யா) முன்னுரிமை அளிக்கும்படி
போதனையாளர்கள் குறிப்பாக சிலாங்கூர் இஸ்லாமிய இலாகாவின் கீழ்
உள்ளவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மிதமான அம்சங்களை விதைப்பதன் மூலம் சிறார்கள் தீவிரவாத
தரப்பினரின்பால் கவரப்படுவதைத் தடுக்க இயலும் என்று மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வாஸாத்தியா மற்றும் தீவிரவாதத்தை களைவது தொடர்பான இன்றைய
கருத்தரங்கு கல்வி வழங்குவதில் மிதமான அணுகுமுறைக்கு
முக்கியத்துவம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை
போதனையாளர்களுக்கு வழங்குகிறது என்று அவர் சொன்னார்.
இங்குள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா பள்ளிவாசலில் நேற்று
நடைபெற்ற தீவிரவாதத்தை களைவது தொடர்பான கருத்தரங்கைத்
தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தீவிரவாதம் அல்லது அதீத அம்சங்களால் சிறார்கள் கவரப்படுவதைத்
தடுப்பதற்கான வழிகாட்டிகளை வழங்குவதற்குரிய உபகரணங்களை
போதனையாளர்களுக்கு இந்த கருத்தரங்கு வழங்குகிறது. பிற
இனங்களுக்கு மத்தியில் மட்டுமின்றி சொந்த மதத்திற்குள்ளும்
தீவிரவாதம் ஊடுருவும் என்பதை வலியுறுத்துவது மிக முக்கியமாகும்
என்று அவர் சொன்னார்.
சிறார்கள் நிராகரிக்கும் பக்குவத்தைக் கொண்டவர்களாகவும் அறிவார்ந்த
முடிவுகளை எடுக்க க் கூடியவர்களாகவும் இருப்பதை உறுதி செய்ய இந்த
நினைவூட்டல் மிக அவசியமானது என்றார் அவர்.


