பாங்கி, செப். 30 - லெபனான் நாட்டில் மலேசிய மாணவர்கள் யாரும் கல்வி பயிலவில்லை என்பதை உயர்கல்வியமைச்சு நேற்று உறுதிப்படுத்தியது.
மத்திய கிழக்கில் உள்ள மலேசிய கல்வி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அங்கு எந்த மாணவரும் பயிலவில்லை என்பது தெரிய வந்ததாக உயர்கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ரி அப்துல் காடீர் கூறினார்.
பதிவு பெறாத மாணவர்கள் அங்கு இருக்கும் சாத்தியம் தவிர, பதிவு பெற்ற மலேசிய மாணவர்கள் யாரும் அங்கு கல்வி பயிலவில்லை என்பது கல்வி அலுவலகத்தின் தரவுகள் வழி தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற “மலேசிய உயர்கல்விப் பயணம்- டாக்டர் ஜாம்முடன் சந்திப்பு- புதிய மாணவர்களுக்கான விளக்கங்களும் நுட்பங்களும்“ எனும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
லெபனானில் மலேசிய மாணவர்கள் யாரும் கல்வி பயில்கிறார்களா? என்பதைக் கண்டறிய தாங்கள் வெளியுறவு அமைச்சுடன் அணுக்கமாக செயல்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
மலேசிய மாணவர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அங்குள்ள மதராஸாக்கள் அல்லது கல்வி நிலையங்களில் பயின்று வரும் பட்சத்தில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கையை அரசாங்கம் விஸ்மா புத்ரா வாயிலாக எடுக்கும் என்று அவர் கூறினார்.
மலேசிய மாணவர்கள் யாரும் அங்கு இருக்கும் பட்சத்தில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை விஸ்மா புத்ரா எடுக்கும் என நான் நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டார்.
லெபனானில் நிகழ்ந்து வரும் கவலையளிக்கும் வகையிலான சமீபத்திய நிலவரங்களைக் கருத்தில் கொண்டு அங்குள்ள மலேசியர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும்படி விஸ்மா புத்ரா கடந்த புதன்கிழமை கேட்டுக் கொண்டது.


